இந்தியா

“மதச்சார்பின்மைக்கு எதிராக எதையும் கூறவில்லை” - மேகாலய நீதிபதி விளக்கம்

“மதச்சார்பின்மைக்கு எதிராக எதையும் கூறவில்லை” - மேகாலய நீதிபதி விளக்கம்

webteam

மதச்சார்பின்மைக்கு எதிராக தான் எதுவும் கூறவில்லை என மேகாலய நீதிபதி சென் தெரிவித்துள்ளார். 

மேகாலய உயர்நீதிமன்றத்தில், ராணுவ சேர்ப்புக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 12ஆம் நடைபெற்றது. அப்போது தீர்ப்பு வழங்குவதற்கு முன் பேசிய நீதிபதி எஸ்.ஆர். சென், “நாடு பிரிவினை அடைந்த போது, லட்சக்கணக்கான சீக்கியர்கள், இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள். தன்னுடைய சொந்த நிலத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இவை அனைத்து மறுக்க முடியாத உண்மை. பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது. மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதால், இந்தியாவும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் மதச்சார்பின்மை நாடாக உள்ளது” என்று கூறினார்.  

அவரது இந்தப் பேச்சுக்கு உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் சென் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்றும், அதனால் தான் அவர்களின் ‘ஹிந்து நாடு’ கோரிக்கை வலியுறுத்துவதாகவும் குற்றச்சாட்டினர்.

இந்நிலையில் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ள நீதிபதி சென், “நான் எந்த அரசியல் அமைப்பையும் சார்ந்தவர் அல்ல. ஓய்வுக்குப் பின்னர் எந்தவித அரசியல் பதவிகளையும், அதிகாரப்பொறுப்புகளையும் அடைய வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை. எனது பேச்சை சில கட்சியினர் திரித்து அரசியல் ரீதியாக தவறாக சித்தரிக்கின்றனர். எது வரலாறு, எது களநிலவரமோ மற்றும் எது உண்மையோ அதையே நான் கூறினேன். 

எனது தீர்ப்பின் கருத்தை சாதி, இனம், மதம் மற்றும் மொழி ஆகியவற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கே கூறினேன். அத்துடன் மக்கள் வரலாற்றை புரிந்துகொண்டு அமைதியுடன் வாழ்வதற்காகவே தெரிவித்தேன். மற்றபடி, மதச்சார்பின்மைக்கு எதிராக நான் எதையும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.