இந்தியா

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ’நாட் இன் மை நேம்”

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ’நாட் இன் மை நேம்”

webteam

கும்பல் தாக்குதல்களுக்கு எதிராக #Notinmyname (எங்களின் பெயரில் தாக்குதல்களை நடத்தாதே) என்னும்
ஹேஷ்டேக் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ட்ரெண்டாகி வருகிறது.

திரைப்பட இயக்குநர் சபா தேவன் தனது ஃபேஸ்புக் பதிவில் தொடங்கிவைத்த இந்த ஹேஷ்டேகில், பலரும்
தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியா டுடே செய்தி நெறியாளரான ராஜ்தீப் சர்தேசாய், தனது ட்விட்டர் தளத்தில், ”எந்த மதத்தைச் சேர்ந்த
எந்த குடிமகன் குறிவைத்து தாக்கப்பட்டாலும் அதற்கு எதிரானது இந்த பிரச்சாரம்” எனப் பதிவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதரின் ட்விட்டர் பதிவில், ”அக்லக்கிற்காக ஓங்கிய சத்தம், ஜுனைத்தின்
விஷயத்தில் குறைந்த எதிரொலியாக உள்ளது. தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றிணையுங்கள். குரல் கொடுங்கள்”
என்று தெரிவித்துள்ளார்.

எங்கு தாக்குதல் நடந்தாலும் அதற்கு இந்து அமைப்புகளைக் குறை சொல்லக்கூடாது என்னும் ரீதியிலும்,
இந்துக்களை நோக்கிய வெறுப்புப் பிரச்சாரம் என்ற ரீதியிலும் இதே ஹேஷ்டேகில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

இன்று, ஜூன் 28-ஆம் தேதி, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு
உள்ளிட்ட பல இடங்களில் இது பிரச்சாரமாக நடைபெற உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இதே
கருத்தை வலியுறுத்தி ஜூலை -1-ஆம் தேதி “மெளனத்தை உடைத்திடு” என்னும் பெயரில் மற்றொரு
போராட்டமும் நடக்க இருக்கிறது.

டெல்லி-மதுரா பயணிகள் ரயிலில், கடந்த வியாழனன்று 3 இஸ்லாமிய சகோதரர்களை 20-25 பேர் கொண்ட
கும்பல் ஒன்று தாக்கியதில் ஜுனைத் என்ற 17 வயது  சிறுவன் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து
பரிதாபாத்தில் உள்ள கந்தவாலி கிராமத்தில் ஜுனைத் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அக்கிராமத்தைச்
இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருமே கறுப்புப் பட்டை அணிந்து ஈத் பண்டிகையை கண்ணீருடனும்
துக்கத்துடனும் அனுசரித்தனர்.