21-ம் நூற்றாண்டின் சிறந்த நடிகர் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நாஸ்ட்ராடமஸ் கணித்திருப்பதாக பிரதமர் மோடியை தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி மறைமுகமாக தாக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் பதில் என்ன என்று தலித் அதிகார் மஞ்ச் இயக்கத்தின் தலைவரும், குஜராத் மாநிலத் தேர்தலில் வட்காம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது பிரதமர் மோடி, “உங்களுக்கு கொல்ல வேண்டும் என்றால் என்னை சுட்டுக் கொல்லுங்கள். என்னுடைய தலித் சகோதரர்களைக் கொல்லாதீர்கள்” என்று கூறினார்.
இந்நிலையில், 21-ம் நூற்றாண்டின் சிறந்த நடிகர் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நாஸ்ட்ராடமஸ் கணித்திருப்பதாக பிரதமர் மோடியை ஜிக்னேஷ் மறைமுகமாக தாக்கி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தலித் மக்கள் பேஷ்வாக்களுடன் போர் செய்து வெற்றி பெற்றதன் 200வது ஆண்டை கொண்டாடும் விதமாக, பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார். இந்த போரின் வெற்றி என்பது ஆங்கிலேயர்களின் வெற்றி என்று சில வலதுசாரி இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டன. அப்போது நிகழ்ச்சிக்கு சென்ற தலித் மக்கள் மீதும், வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் நடந்த இடங்களை ஜிக்னேஷ் பார்வையிட்டார்.
பசுப்பாதுகாவலர்களால் தலித் மக்கள் தாக்கப்பட்டபோது பேசிய மோடி, “நாட்டை உருவாக்குவதில் ஒற்றுமைதான் மிகப்பெரிய பலம். ஆனால் சில நேரங்களில் நடக்கும் இப்படிப்பட்ட சம்பவங்களால் எனது தலை அவமானத்தால் தொங்கிவிடுகிறது. வாய்ப்பிழந்த மக்களுக்கு மரியாதையையும், கவுரவத்தையும் கொடுத்து ஆதரவளிப்பது நமது கடமை” என்று பேசினார்.
பிரதமரின் இந்த பேச்சுக்கு பிறகும், பசுப்பாதுகாவலர்களின் தாக்குதல் ஓயவில்லை. பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடெங்கும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தற்போது, தலித் மக்களின் வெற்றிச்சின்னமாக கருதப்படும் பீமா கோரேகான் நினைவுதூண் அமைக்கப்பட்டதன் 200வது விழாவிலும் வன்முறை நிகழ்ந்துள்ளது.