தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை என்று மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத் துறை இணை அமைச்சரான எம்.ஜே.அக்பர், பத்திரிகையாளராக இருந்தபோது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் பத்திரிகையாளர்கள் சிலர் #MeToo இயக்கத்தில் தெரிவித்திருந்தனர். நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், இந்த இயக்கத்தில் பலர் மீது பாலியல் புகார்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் நிலையில், மத்திய இணை அமைச்சர் மீதான புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கூடும் என்று டெல்லி வட்டாரங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆப்ரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய அக்பர், தனது மவுனத்தைக் கலைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது நடத்தை மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார் அடிப்படை ஆதாரமற்ற புகார்களால் தனது நன்மதிப்புக்கு சரிசெய்ய முடியாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடுமையான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து தனது வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ள அவர், சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுபோன்ற சர்ச்சையை கிளப்புவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.