இந்தியா

உடல் எடை குறைகிறது என்பதற்காக ஜாமீன் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்

jagadeesh

சிறையில் இருப்பதால் உடல் எடை குறைகிறது என்பதற்காக சஜ்ஜன் குமாருக்கு ஜாமீன் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

1984-ஆம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரம் தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்றிருக்கும் சஜ்ஜன் குமார், ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த 11 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் உடல் எடை 10 கிலோ வரை குறைந்து விட்டதாலும், தனது வயதை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சஜ்ஜன் குமார் சார்பில் வாதிடப்பட்டது. 

எடை குறைகிறது என்பதை காரணமாகக் கொண்டு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதிகள் மறுத்தனர். தேவையான மருத்துவ உதவிகள் நீதிமன்றத்திலேயே செய்து தரப்படும் என்றும் தெரிவித்தனர். சஜ்ஜன் குமாரின் உடல் நிலையை எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து நான்கு வார காலத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.