ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தன்னை தந்தையைப் போல வழிநடத்தியதாகவும், அவரோடு பணியாற்றியது பெருமை அளிப்பதாகவும், அதை எப்போதும் மறக்க மாட்டேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரணாப் முகர்ஜி - ஒரு ராஜதந்திரி என்கிற பெயரில் டெல்லியில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மோடி, உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அடிக்கடி சுற்றுப்பயணம் செய்வதை தவிர்த்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என பிரணாப் அக்கறையுடன் கூறியதாக மோடி தெரிவித்தார். மேலும், தன் மீது ஒரு தந்தையைப் போல் அக்கறை செலுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அடிப்படையில், பிரணாப் முகர்ஜி காங்கிரஸில் இருந்து வந்தவர். குடியரசுத் தலைவர் பொறுப்பில் அமர்ந்த பிறகு 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது. ஆனாலும், பாஜக மற்றும் மோடியுடன் மிகுந்த ஒத்துழைப்போடு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.