குஜராத்திகள், ராஜஸ்தானியர்கள் மும்பை மற்றும் தானேவை விட்டு வெளியேறினால், மகாராஷ்டிராவில் பணம் இருக்காது என்று அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான அந்தேரியில் ஒரு பகுதிக்கு பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, “மகாராஷ்டிராவில் இருந்து குறிப்பாக மும்பை மற்றும் தானேயில் இருந்து, குஜராத்திகள் மற்றும் ராஜஸ்தானியர்களை அகற்றினால், உங்களிடம் பணம் இருக்காது, மும்பை இந்தியாவின் நிதி தலைநகராக இருக்காது என்று இங்குள்ள மக்களிடம் கூறுகிறேன்" என்று பேசினார்.
கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள்:
சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், ஆளுநர் கோஷ்யாரியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆளுநரின் பேச்சை கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "பாஜக ஆதரவுடன் முதல்வர் பதவிக்கு வந்தவுடனேயே மராத்தியர்கள் அவமதிக்கப்படுகின்றனர். முதல்வர் ஷிண்டே, குறைந்தபட்சம் ஆளுநரையாவது கண்டிக்க வேண்டும். இது கடுமையாக உழைக்கும் மராத்தி மக்களை அவமதிக்கும் செயலாகும். முதல்வர் ஷிண்டே, நீங்கள் கேட்கிறீர்களா? உங்களுக்கு சுயமரியாதை இருந்தால், கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் “ஒரு மாநிலத்தின் ஆளுநர் அதே மாநில மக்களை அவதூறாகப் பேசுவது பயங்கரமானது. அவர் ஆளுநராக இருக்கும்போது மகாராஷ்டிராவின் ஆளுநரின் மாண்பு மற்றும் அரசியல் பாரம்பரியம் மோசமடைந்தது மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா தொடர்ந்து அவமரியாதைக்கு ஆளாகிறது," என்று கூறினார்.
சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, “மகாராஷ்டிரா மாநிலத்தை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றுவதற்காக நாள்தோறும் உழைத்த மராத்தி மக்களின் கடின உழைப்புக்கு இது அவமானம். ஆளுநர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் நாங்கள் அவரை மாற்றவும் கோரிக்கை வைப்போம்” என்று கூறினார்.
ஆளுநர் விளக்கம்:
மராத்தி மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது தனது நோக்கமல்ல என ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி விளக்கம் அளித்துள்ளார். “நான் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை சேர்ந்த மக்கள் அளித்த பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டேன். அதே வேளையில் மராத்தியர்கள் இன்றைய மகாராஷ்டிராவை நிறுவ கடுமையாக உழைத்தார்கள். எனவே அவர்களை இழிவுபடுத்துவது அல்லது குறைத்து மதிப்பிடுவது பற்றிய கேள்விக்கே இடமில்லை. அது என் நோக்கமும் அல்ல” என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.