நடந்த நிகழ்வுகளுக்கு நானே பொறுப்பு என ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலிடம் கரண் ஜோஹர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
அப்போது, ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர். இதற்காக சமூக வலைத்தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்காக பிசிசிஐ அவர்கள் இருவருக்கும் விளையாடத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் விராட் கோலி, முறையற்ற கருத்துகளுக்கு இங்கு இடமில்லை எனவும் பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் கருத்தை ஆதரிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து நீண்ட நாட்களாக தொகுப்பாளர் கரண் ஜோஹர் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து தற்போது முதன் முதலில் கரண் ஜோஹர் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “ நடந்த நிகழ்வுகளுக்கு நான் தான் பொறுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இது என்னுடைய நிகழ்ச்சி. அது என்னுடைய தளம். நான் விருந்தாளிகளாக அவர்களை அழைத்தேன், அதனால் நிகழ்ச்சியின் எதிர்வினைகள் மற்றும் விளைவுகள் என்னை பொறுத்தது.
நான் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். இந்த நிகழ்வு என்னை மீறி நடந்து விட்டது. அவர்களின் தற்போதைய நிலை குறித்து மிகவும் வருந்துகிறேன். இதுப்போன்ற கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் உட்பட எல்லோரிடமும் கேட்பது வழக்கம்தான். தீபிகா படுகோனே, ஆலியா பட் ஆகியோரிடம் இந்தக் கேள்விகளை கேட்டுள்ளேன். ஆனால் இதுப்போன்று நடக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை. இதனால் டிஆர்பி ஏறியிருக்கும். நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என சிலர் கூறுகின்றனர். ஆனால் எனக்கு டிஆர்பி பற்றியெல்லாம் கவலையில்லை. இதில் என்னுடைய கேரியரும் பாண்டியா மற்றும் ராகுலின் கேரியரும் அடங்கியுள்ளது. இந்த நிகழ்வுகளை நினைத்து பல இரவுகள் தூங்காமல் யோசித்து கொண்டிருக்கிறேன். நடந்த சம்பவங்களுக்கு ஹர்த்திக் பாண்டியாவும் ராகுலும் என்னை மன்னிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.