இந்தியா

முதலமைச்சர் வற்புறுத்தியதால் சிஏஏவுக்கு எதிரான வாசகங்களை வாசித்த கேரள ஆளுநர்..!

jagadeesh

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களை கேரள சட்டப்பேரவையில் படிக்கப்போவதில்லை என கூறியிருந்த ஆளுநர் ஆரிப் முகமது கான், தனது முடிவை கைவிட்டு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை வாசித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாள் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பேரவைக்கு வருகை தந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றால், அவற்றை படிக்கமாட்டேன் என ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளுநரை திரும்ப பெற கோரியும், பேரவைக்கு வந்த ஆளுநரை மறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து சபை காவலர்கள் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரின் பாதுகாப்புடன் ஆளுநர் அவரது இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் உரையாற்றிய ஆளுநர் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வாசகங்களை வாசித்தார். சி.ஏ.ஏ. என்பது அரசின் திட்டம் தொடர்பானது இல்லை என்றாலும், முதலமைச்சர் வலியுறுத்தியதால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களை வாசிப்பதாக ஆளுநர் முகம்மது ஆரிப் கான் கூறினார்.