பிரதமரை அறைய வேண்டும் என தான் ஒரு போதும் கூறவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பாங்க்குராவில் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, தன்னை அறைய போவதாக மம்தா கூறியுள்ளார் என்றும், ஆனால் அவரது பேச்சு தனக்கு ஆசிர்வாதமாக மாறப்போகிறது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு மம்தா விளக்கம் அளித்துள்ளார்.
மோடியின் ஆட்சியைக் கண்டு மக்கள் கடுங்கோபமாக இருக்கின்றனர் என்றும், அவர்கள் தங்கள் கோபத்தை வாக்குகள் வடிவில் தேர்தலில் காட்டுவார்கள் என்றும் கூறியதாக மம்தா தெரிவித்துள்ளார். இதையே மோடியின் ஆட்சியின் மீது ஜனநாயகம் விடப் போகும் அறை என தான் சுருக்கமாக கூறியதாகவும் மம்தா விளக்கம் அளித்துள்ளார். மேலும் தான் யாரையும் தாக்கக் கூடியவர் அல்ல என்றும், தனது மொழியை மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மம்தா விளக்கியுள்ளார்.