இந்தியா

’பெட்ரோல், டீசல் மீதான வரியை அரசு குறைத்தால் மட்டுமே விலை குறையும்’ - எண்ணெய் நிறுவனங்கள்

sharpana

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தால் மட்டுமே அவற்றின் விலை குறையும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பேசிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் தலைவர் முகேஷ் குமார் சுரானா, சவுதி அரேபியா திடீரென கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 59 டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் 25 முதல் 30 சதவிகிதம் வரையே அதன் உண்மையான விலை என்றும் மற்றவை மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் வகையில் வரும் என்றும் தெரிவித்தார். எனவே மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் சுரானா கூறினார்.

முன்னதாக கச்சா எண்ணெயின் விலையை செயற்கையாக உயர்த்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் உலக பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கவலை தெரிவித்திருந்தார். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவிகிதத்தை பெட்ரோல், டீசல் மூலமே பெற்று வருவது குறிப்பிடத்தக்கது