இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிகாரிகள் தவறு செய்யவில்லை- ப.சிதம்பரம்

webteam

ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பாக அரசு அதிகாரிகள் யாரும் தவறு செய்யவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது. சிபிஐ காவல் முடிவடையும் நிலையில் சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டாம் என சிதம்பரம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் ப.சிதம்பரத்தை வரும் 19ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றமான டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், போதிய பாதுகாப்புடன் தனிச்சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் சார்பில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது. அதில், மக்கள் சிலர் என்னை பார்த்து ”இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை முன்மொழிந்த அரசு அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அப்படி இருக்கும் போது கடைசியாக கையெழுத்து போட்ட நீங்கள் மட்டும் எவ்வாறு கைது செய்யப்பட்டீர்கள்? எனக் கேட்கின்றனர். 

ஆனால் எந்த அரசு அதிகாரியும் தவறு செய்யவில்லை. ஆகவே அவர்கள் யாரும் கைது செய்யப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை” என்று பதிவிடப்பட்டுள்ளது.