இந்தியா

”ரிலையன்ஸ் குழுமத்தில் 20 லட்சம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த உள்ளோம்”: நீதா அம்பானி

sharpana

”கொரோனா சூழலில்கூட எங்கள் பணியாளர்களுக்கு சம்பளக்குறைப்போ, போனஸையோ கட் செய்யவில்லை. எங்கள் பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினர் என 20 லட்சம் பேருக்கு இலவச தடுப்பூசி செலுத்தவிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார், நீதா அம்பானி.

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 44 வது ஆண்டுவிழா இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய, முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர்களில் ஒருவரான நீதா அம்பானி, ”எங்கள் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கும், பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் 20 லட்சம் பேருக்கு இலவச தடுப்பூசி போடப்படவுள்ளது” என்று அறிவித்தவர், மற்றொரு தகவலையும் பகிர்ந்துகொண்டார்,

 ”கொரோனா ஒரு மனிதாபிமான நெருக்கடி. இந்த சூழலில் அனைவருமே கொரோனாவை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த நெருக்கடியான கொரோனா காலகட்டம் முழுமையாகவே, எங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி சம்பளக் குறைப்பு செய்யவில்லை. போனஸ் வழங்குவதையும் நிறுத்தவில்லை” என்று பெருமையுடன் கூறியிருக்கிறார்.