முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் ப.சிதம்பரம் உள்ளார். இதே வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் காலை 11.30 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறையின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். அவர், “வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதைவிட தப்பிக்கவே சிதம்பரம் முயற்சி செய்தார். தலைமறைவாக இருந்தவர் இப்போது முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை நேர்காணல் பெற விரும்பவில்லை. அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்கவே விரும்புகிறது. அத்துடன் வழக்கில் தொடர்புடையவர்களுடன் ப.சிதம்பரத்தை அமர வைத்து அமலாக்கத் துறை விசாரிக்கவுள்ளது.
மேலும் ப.சிதம்பரத்துக்கு இந்த வழக்கில் சலுகைகள் வழங்கினால் விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட வங்கி மோசடி வழக்கு விசாரணைகளுக்கு பாதகம் ஏற்படும். ப.சிதம்பரத்தை கைது செய்யாமல் உண்மையை வரவழைக்க இயலாது என்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது. காவலில் எடுத்து விசாரிப்பது ஒவ்வொரு விசாரணை அமைப்பின் அடிப்படை நடைமுறை. ப.சிதம்பரம் செய்த குற்றம் சமூகத்துக்கு எதிரானது, தேசத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடைபெற உள்ளது.