மோடிக்கு எதிராக யார் என பாஜகவினர் கேட்பதாகவும் அதற்கு பதில் மோடிக்கு எதிராக அவரது வாக்குறுதிகள் தான் எனவும் பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “5 மாநில தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது மக்கள் வெற்று வாக்குறுதிகளை கண்டு விரக்தியடைந்துள்ளதையே காட்டுகிறது. பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இந்தத் தோல்வி அவர்களை வந்தடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. விரைவில் 2019 நாடாளுமன்றத்தேர்தல் வரவுள்ளது. அதில் மோடி அமித்ஷா சகாப்தத்தை புறக்கணித்து மீண்டும் அவர்களின் பழைய நிலைக்கு தள்ள வேண்டும்.
முதலில் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக ராகுல் காந்திக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். மேலும் 5 மாநில தேர்தலில் பாஜகவை புறக்கணித்ததற்கு வாக்காளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.
மோடிக்கு எதிராக யாரும் இல்லை என நிறைய தலைவர்கள் மற்றும் பாஜகவினர் இன்னமும் நம்புகிறார்கள் என்று எனக்கு தெரியும். கடந்த தேர்தலில் மக்களிடம் மோடி ஆதிக்கமாக இருந்தது. அப்போது 60 ஆண்டுகள் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். 60 மாதங்கள் மட்டும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என மோடி மக்களிடம் கேட்டார். இப்போது அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது ஏன் என்பதை மோடி விளக்க வேண்டும். 2 கோடி பேரின் வேலைவாய்ப்பு என்னவாயிற்று. கருப்பு பணத்தை மீட்டு விவசாயிகளின் துயரத்தையும் அழுகையையும் துடைப்பதாகக் கூறிய வாக்குறுதி என்னவாயிற்று.
மோடிக்கு எதிராக யார் என பாஜகவினர் கேட்கின்றனர். அதற்கு பதில் மோடிக்கு எதிராக அவரது வாக்குறுதிகள்தான் என நான் கூறுகிறேன். பாஜக பலவீனம் அடைந்து வருவதை அவரது கட்சிகாரர்களே ஒப்புக்கொண்டு வருகின்றனர். அரசியல் எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக அவர்களின் பெருமையையும் அதிகாரத்தையும் அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
ஒருவேளை மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியலமைப்பை மாற்றுவதற்கு அவர் முயற்சிப்பார். ஏற்கனவே அவர் ஆர்.பி.ஐ, சிபிஐ, நீதித்துறை, ஊடகங்கள் என நம்முடைய எல்லா துறைகளிலும் தனக்கேற்றவாறு மாற்றம் செய்து வருகிறார். பாஜகவுக்கு நம்பத்தகுந்த எதிர்கட்சியாக காங்கிரஸை பார்க்கலாம். ராகுல்காந்தி காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். வலுவான தளத்தை உருவாக்கி வருகிறார். மேலும், பிராந்தியக் கட்சிகள் வாக்குகளை மாற்றுவதற்கான அதிக திறனைக் கொண்டுள்ளன. எனவே நாம் வெற்றியின் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.