ஜெய் ஸ்ரீராம் என்று அடிக்கடி கூறும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஒரு ராமர் கோவிலாவது கட்டப்பட்டதுண்டா? என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஷ்னுபுர் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தேர்தல் வரும்போதெல்லாம் ராமச்சந்திரன், பாரதிய ஜனதாவின் முகவர் ஆகிவிடுவதாகச் சாடினார். "ஜெய் ஸ்ரீராம்" என்று கூறும் நீங்கள் அத்துடன் நின்றுவிடாமல் மற்றவர்களையும் அவ்வாறு கூறும்படி கட்டாயப்படுத்துவது ஏன்? என்றும் மமதா வினவினார்.
மோடி கூற விரும்பும் கோஷங்களை எல்லாம் மற்றவர்களும் முழங்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது என்று மமதா தெரிவித்தார். ராமரை தாங்கள் மதிப்பதாகவும், அவருக்கு எப்படி மரியாதை கொடுப்பது என்று தங்களுக்குத் தெரியும் என்றும் மமதா குறிப்பிட்டார். அண்மையில், முதலமைச்சர் மமதா பானர்ஜியின் பாதுகாப்பு வாகனம் சென்றபோது "ஜெய் ஸ்ரீராம்" என்று முழக்கமிட்டதற்காக மூன்று பேர் கைது செய்யப் பட்டனர். அதனை விமர்சித்து கடுமையான கருத்துகளை பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு மமதா பானர்ஜி பதில் அளித்திருக்கிறார்.