இந்தியா

உங்களிடம் மாலை பேசுகிறேன் - ராணுவ வீரரின் கடைசி உரையாடல்

webteam

தனது பிறந்த நாள் அன்று ராணுவ வீரர் விமான விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய ராணுவத்தின் சீத்தா ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தின் கிர்மூவிலிருந்து பூடானின் யோங்க்ஃபூல்லா பகுதிக்கு சென்றது. இந்த ஹெலிகாப்டர் சரியாக நேற்று மதியம் ஒரு மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. பூடானில் மிகவும் மோசமான வானிலை நிலவியதால் இந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளானது.  இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ரஜ்னீஷ் பர்மார்.


இவர் தனது பிறந்தநாள் அன்று உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இவரது தந்தை முக்தயார் சிங், “நேற்று என் மகனின் பிறந்தநாள். இதற்கு வாழ்த்து கூற நான் அவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் அவன் வேலையில் இருந்ததால் ' உங்களிடம் மாலை பேசுகிறேன்' எனக் கூறினான். அது தான் அவன் என்னிடம் பேசிய கடைசி வார்த்தையாக இருந்தது. அவனின் இறப்பு எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவன் எப்போதுமே நாட்டிற்காக பணியாற்ற வேண்டும் என்று நினைத்தான்” எனத் தெரிவித்துள்ளார். 

லெப்டினன்ட் கர்னல் ரஜ்னீஷ் பர்மார் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்கரா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு மனைவி மற்றும் 12 வயதில் ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.