2019 ஆண்டிற்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதி அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு விவசாயிகளுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் நடுத்தர மக்களுக்கு வருமான வரிச் சலுகைகளையும் அறிவித்திருந்தது.
இதனையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி,“மத்திய இடைக்கால பட்ஜெட் செழிப்பான இந்தியாவிற்கான ட்ரெய்லர்தான். இந்தப் பட்ஜெட் 130 கோடி மக்கள் ‘புதிய இந்தியா’வை உணர வழிவகுக்கும். மேலும் விவசாயிகளுக்கான ‘பிரதம மந்திரி கிஷான் நிதி’ திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டம். இது விவசாயிகளின் நலத்திற்கான திட்டம். அதேபோல இந்த பட்ஜெட்டில் விலங்கு வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த அருண் ஜெட்லி, “இந்த பட்ஜெட் இந்தியாவின் நடுத்தர மக்களுக்கான ஒன்று. இதன்மூலம் அவர்களின் பொருட்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும். மேலும் பட்ஜெட்டில் உள்ள வரிச்சலுகைகள் நியாயமான ஒன்றுதான். இதற்குமுன் 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் இதுபோன்ற வரிச் சலுகை அறிவிப்புகள் இருந்தன.
அதேபோல, இந்த ஆட்சியில் வேலைவாய்ப்புகள் இல்லை என்று கூறுவதை ஏற்கமுடியாது. ஏனென்றால், எந்தவித வேலைவாய்ப்பும் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவிகித வளர்ச்சியை அடைந்திருக்கமுடியாது.”என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் “என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. விரைவில் நான் பணிக்கு திரும்புவேன் ” என்றும் தெரிவித்துள்ளார்.