நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என, மக்களவையில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் பேசியுள்ளது தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. பல மாநிலங்களில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கூட்டணிகள் பேசப்பட்டுள்ளன. 80 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதனை இரண்டு கட்சியின் தலைவர்களுமான அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் உறுதிசெய்துள்ளனர்.
இந்தக் கூட்டணி பாஜகவிற்கு நெருக்கடி கொடுக்கும் என்பதைவிட, காங்கிரஸுக்கு உதவும் என்ற பேச்சு அங்கு நிலவுகிறது. அத்துடன் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், மாயாவதியை பிரதமராக கொண்டுவரவும் அவர்கள் கோரிக்கை விடுக்கலாம் எனப்படுகிறது. இதுதொடர்பாக நேரடியாக பதிலளிக்காத அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறியுள்ளார்.
உத்தப்பிரதேச நிலை இப்படி இருக்க, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் தந்தையும், அக்கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் மக்களவை இன்று ஒரு அரசியல் குண்டை வீசியுள்ளார். பிரதமர் மோடி பணிகளை விரைந்து முடிக்கிறார் எனப் பாராட்டிய அவர், மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் எனக்கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு தேசிய அரசியலில் முக்கியத்துவம் மற்றும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உத்தரப் பிரதேச அரசியல் பூகம்பமாகவும் வெடித்துள்ளது.