இந்தியா

பேச்சை மீறி வேலையில் சேர்ந்தார் காதலி: கழுத்தை அறுத்த காதலர் சீரியஸ்!

பேச்சை மீறி வேலையில் சேர்ந்தார் காதலி: கழுத்தை அறுத்த காதலர் சீரியஸ்!

webteam

பேச்சை மீறி காதலி வேலையில் சேர்ந்ததால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற காதலர் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கோராவைச் சேர்ந்தவர் ரவி. இவர் அங்குள்ள அனில் விஹார் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவர், தனது வீட்டின் அருகில் வசிக்கும் இளம் பெண்ணை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார். இந்தக் காதல் இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் தெரியும்.

(ரவியின் வீட்டுக்கு வெளியே உறவினர்கள்...)

இந்நிலையில் காதலி வேலைக்கு செல்ல இருப்பதாக ரவியிடம் சொல்லியிருக்கிறார். அதை விரும்பாத ரவி, வேண்டாம் என்று கூறியிருக் கிறார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. இந்நிலையில் ரவியின் பேச்சை மீறி சில நாட்களுக்கு முன் காதலி வேலையில் சேர்ந்தார். இதனால் கோபமான ரவி, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். நேற்று காலை காதலியை சந்தித்துவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்த ரவி, தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை உசுப்பினார். 

எழுந்த அப்பா, என்ன என்று விசாரித்திருக்கிறார். ‘சும்மாதான், போய்விட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டு அடுத்த நொடியே கத்தியால் தன் கழுத்தை அறுத்தபடி, ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அதிர்ச்சி அடைந்த தந்தை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீரியசாக இருந்த அவர் இப்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று கூறப்படுகிறது. 
இதைக் கேள்விபட்ட காதலி, மருத்துவமனைக்கு வந்து கண்ணீர்விட்டு அழுதார். அவரை ரவியின் குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.