இந்தியா

மக்களின் நம்பிக்கையை வெங்கய்ய நாயுடு சிதைத்துவிட்டார்: காங்கிரஸ்

மக்களின் நம்பிக்கையை வெங்கய்ய நாயுடு சிதைத்துவிட்டார்: காங்கிரஸ்

webteam

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் விஷயத்தில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு எடுத்த முடிவு மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாக உள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டுவரக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 64 எம்பிக்கள் மற்றும் 7 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்தி‌ட்டு மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் வெங்கய்ய நாயுடுவிடம் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த நோட்டீஸ் தொடர்பான விவரங்களை செய்தியாளர்களிடமும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பகிர்ந்துகொண்டனர். நோட்டீஸ் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி எதிர்க்கட்சிகளின் நோட்டீஸை அவர் நிராகரித்தார். 

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், குடியரசுத் துணைத்தலைவரின் நடவடிக்கையானது முன்னெப்போதும் இல்லாததாகும் என்று அதிருப்தி தெரிவித்தார். இது மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாகவும், சட்ட நடைமுறைகளை அழிக்கும் வகையிலும் இருப்பதாகவும் விமர்சித்தார். வெங்கய்ய நாயுடுவின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாகவும், கபில் சிபல் தெரிவித்தார்.