இந்தியா

“நான்கு ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்” - கவுடா பேச்சுக்கு குமாரசாமி விளக்கம்

webteam

நான் உள்ளாட்சி தேர்தல் வருவதைதான் குறிப்பிட்டேன் என்று தேவகவுடா தனது பழைய பேட்டி குறித்து விளக்கமளித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றனது. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- ஜனதா தளம் கட்சி படுத்தோல்வியடைந்தது. இந்த இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் மட்டும் வெற்றிப் பெற்றன. இதனையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இதனையடுத்து கர்நாடகாவில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தற்போது நடந்துகொள்வதை பார்த்தால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம் என்று தேவகவுடா கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து தேவகவுடா விளக்கமளித்துள்ளார். 

அதில், “என்னுடைய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. நான் கூறியது கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரும் என்றே குறிப்பிட்டேன். சட்டப் பேரவை தேர்தலை நான் கூறவில்லை. குமாரசாமி கூறியது போல கர்நாடகாவில் எங்கள் ஆட்சி தொடர்ந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது சம்பந்தமாக ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து கர்நாடாக முதல்வர் குமாரசாமியும் விளக்கமளித்துள்ளார். அதில், “என்னுடைய தந்தையின் கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. அவர் உள்ளாட்சி தேர்தல் வருவதையே கூறினார். கர்நாடக சட்டப் பேரவை தேர்தலை அவர் குறிப்பிடவில்லை. இதுதொடர்பாக அவர் விளக்கமும் அளித்துள்ளார். அடுத்த நான்கு ஆண்டுகள் எங்களது ஆட்சி கண்டிபாக நீடிக்கும்” எனக் கூறியுள்ளார்.