இந்தியா

'சபரிமலை கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது' கேரள முதல்வருக்கு பதிலடி !

webteam

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு  கடந்த 17 ஆம் தேதி ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பெண்கள் சபரிமலை கோயில் சந்நிதானத்துக்கு செல்ல முயன்றதால் பரபரப்பாகவே காணப்பட்டது. பல போராட்டங்களால் யாரும் கடைசிவரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பலரும், கோயிலின் நடைப்பந்தல் வரை சென்று திரும்பியுள்ளனர். ஆனால், யாராலும் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.

இந்த விவகாரத்தில் கேரள அரசு, தேவஸம் போர்டு மற்றும் பந்தள ராஜ குடும்பத்தினரிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதால் சுமூகத் தன்மை ஏற்படாமல் இருக்கிறது. அனைத்து வயது பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, பந்தள ராஜ குடும்பத்தினர் தீர்ப்பு வந்த நாள் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவஸம் போர்டினால் கேரள அரசையும் எதிர்க்க முடியாது, பந்தள ராஜ வம்சத்தையும் எதிர்க்க முடியாது என்பதால் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர் அதன் நிர்வாகிகள். 

இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஒரு கேள்வியை எழுப்பினார். சபரிமலைக்கு யார் சொந்தக்காரர்? சபரிமலை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? என்பதுதான். 1949ம் ஆண்டு போடப்பட்ட முத்தரப்பு உடன்படிக்கை பற்றி அவர் பேசினார். தேவஸம் போர்டு தொடங்கப்பட்டு சபரிமலையின் வரவு செலவுகள் மற்றும் அதன் பராமரிப்பு உரிமைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அப்படி யாருமே உரிமை கொண்டாடவில்லையே? சபரிமலை யாருடையது தான் என்று கேள்வி எழுப்பினார். அப்போது பலர் தேவஸம் போர்டுக்கே உரிமை உள்ளது என பலர் குரல் எழுப்பினர்.

இது குறித்து பதிலளித்த பந்தள ராஜ குடும்பத்தின் வாரிசான சசிகுமார் வர்மா " சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அக்கோயிலின் தொன்மையான சடங்குகள், பாரம்பரியத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுடையது. முதல்வர் கூறுவது போல திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு சொந்தமானது அல்ல. சபரிமலை கோயிலின் வழக்கத்திலும் பாரம்பரியத்திலும் ஏதேனும் விதிமீறல் நிகழ்ந்தால், அதுகுறித்து கேள்வியெழுப்பும் உரிமை பக்தர்களுக்கு உள்ளது."

"சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டால், நடையை மூடும்படி தந்திரியை நாங்கள் ஒருபோதும் கேட்டுக் கொள்ளவில்லை. சபரிமலையில் கடந்த 17-ஆம் தேதி முதல் 6 தினங்களாக கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது. அப்போது, பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அரசு தவறிவிட்டது. அதேவேளையில், 6 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் மலை ஏறி வந்தனர். 10 முதல் 50 வயதுக்குள்பட்ட உண்மையான பெண் பக்தர் யாரும் கோயிலுக்கு வரவில்லை என்றார் சசிகுமார் வர்மா.