இந்தியா

தொடர் பிரசாரம்: பேச்சை இழக்கும் நிலையில் சித்துவுக்கு சிகிச்சை!

தொடர் பிரசாரம்: பேச்சை இழக்கும் நிலையில் சித்துவுக்கு சிகிச்சை!

webteam

தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து 17 நாட்கள் ஈடுபட்டதால், பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பேசும் சக்தியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான சித்து, சமீபகாலமாக மீடியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். கர்தார்பூர் வழித்தட தொடக்க விழாவுக்காக பாகிஸ்தான் சென்று வந்தது, பஞ்சாப் முதல்வருக்கு எதிராக ராகுல்தான் என் கேப்டன் என்று கூறியது என பரபரப்பாக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்னொரு பரபரப்பு அவர் பற்றி எழுந்துள்ளது. 

ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல்களுக்கான பிரசாரத்தில் சித்து ஈடுபட்டார். அவர் கடந்த 17 நாட்களில் 70-க்கும் மேற்பட்ட பொது கூட்டங்களில் பேசினார். இதனால் அவரது தொண்டை கடுமையாகப் பாதிப்படைந்தது. அதன் உச்சக்கட்டமாக, பேசும் சக்தியை இழக்கக் கூடிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 3 முதல் 5 நாட்கள் வரை முழு ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.