இந்தியாவில் 70 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு நிதித்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் தனியார் முதலீடுகள் குறைந்து காணப்படுகிறது. மேலும் தொழில்துறையின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி குறைந்து உள்ளது. இதனையடுத்து பல்வேறு ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் நிலவும் பொருளாதார சூழல் குறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்துடன் தனியார் நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை நிறுத்தியுள்ளது. மேலும் அந்நிறுவனங்கள் தங்களுக்குள் கடன் பெற தயாராக இல்லை. இந்த நிதி நெருக்கடி மற்றும் முதலீட்டு குறைபாடு இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய பட்ஜெட்டில் ஒரு சில முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் வங்கிகளில் வராகடன்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் அவர்களால் புதிதாக கடன்கள் கொடுக்க முடியவில்லை. அத்துடன் 35 சதவிகிதமாக இருந்த பண புழக்கம் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு பிறகு குறைந்துள்ளது. எனவே இந்தியாவில் நிதித் துறையில் நெருக்கடி மிகவும் அதிகமாகி விட்டது. இந்த நிதித் துறை நெருக்கடியை போக்க கூடுதலான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.