இந்தியா

“ஓடியது போதும் மேடம்..”- சுஷ்மா கணவரின் முந்தைய நெகிழ்ச்சி பதிவு

webteam

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் நேற்று காலமானார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானியும் கண்ணீர் மல்க சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, சுஷ்மா ஸ்வராஜ் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இதற்கு அவரது கணவர் ஸ்வராஜ் கௌவுசல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், “நீங்கள் தேர்தலில் பங்கேற்க மாட்டேன் என்று முடிவு எடுத்ததற்கு மிக்க நன்றி. ஒருநாள் மில்கா சிங்கும் அவர் ஓட மாட்டேன் என்ற முடிவை எடுத்தார். அதை போலவே உங்களது முடிவும் உள்ளது.

உங்களின் மாரத்தான் ஓட்டம் 1977-ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது இருந்து நீங்கள் 11 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளீர்கள். அத்துடன் நீங்கள் 4 முறை மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளீர்கள். நீங்கள் உங்களின் 25ஆவது வயதிலிருந்து தேர்தலை சந்திக்கிறீர்கள். இந்த மாரத்தான் பயணத்தை 41 ஆண்டுகள் தொடர்ந்துள்ளீர்கள். நானும் உங்கள் பின்னால் 46 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன். நான் இன்னும் 19 வயது மதிக்க தக்க நபர் இல்லை. இந்த முடிவை எடுத்ததற்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார். 

கடந்த 2016ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் சுஷ்மா ஸ்வராஜ் அவதிப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து 2018ஆம் ஆண்டு தனது உடல் நிலை காரணமாக இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை என சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.