தனது கட்சி பிரமுகரை வெட்டிகொன்றவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லுங்கள் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிடும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்தவர் பிரகாஷ். ஆளும் ஜனதா தளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த இவர், நேற்று மாலை காரில் சென்றுகொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர், அவர் காரை பின் தொடர்ந்தனர். ஒரு இடத்தில் காரை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர். ஆளும் கட்சி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டது, அந்த மாவட்டத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
(பிரகாஷ்)
இந்நிலையில், இந்தக்கொலை செய்தி பற்றி அறிந்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காவல்துறை அதிகாரியிடம், “ அவர் (பிரகாஷ்) நல்ல மனிதர். அவரை இப்படி கொன்றவர் யார் என்று தெரியவில்லை. கொலையாளிகளை இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொல்லுங்கள். அதனால் பிரச்னை ஏதுமில்லை’’ என்று செல்போனில் நேற்று உத்தரவிட்டார். பெங்களூர் பத்திரிகை யாளர் ஒருவர் குமாரசாமியை வீடியோ எடுத்தபோது, அவரது இந்த பேச்சும் அதில் பதிவாகியது. இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் குமாரசாமி, ” அது என் உத்தரவு இல்லை. அப்போது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தேன். இரண்டு கொலையை செய்துவிட்டு சிறையில் இருந்தவர்கள், இரண்டு நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்து மற்றொருவரை கொன்றுள்ளனர். ஜாமினை முறைகேடாக, அவர்கள் இப்படி பயன்படுத்தியுள்ளனர்” என்றார்.