இந்தியா

கொல்கத்தாவில் உயிரைப் பறித்தது சாகச மேஜிக்!

கொல்கத்தாவில் உயிரைப் பறித்தது சாகச மேஜிக்!

webteam

கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றில் சாகசம் செய்ய முயன்ற மேஜிக் மேன் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

கொல்கத்தாவைச் சேர்ந்த மேஜிக் மேன் சன்சால் லஹிரி. 41 வயதான இவர் பல்வேறு மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். இவர் உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேஜிக் நிகழ்ச்சிகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ‘ஹேரி ஹைதினி’ என்ற எஸ்கேப் கேம் மேஜிக்கை நேற்று முன் தினம் செய்துள்ளார். அதன்படி, கை கால்களை கட்டி ஆற்றில் குதித்து உள்ளே இருந்து மீண்டும் வெளியே வரவேண்டும். அவர் தன், கை, கால்களை சங்கிலியால் கட்டிக் கொண்டார். பிறகு ஒரு கூண்டுக்குள் அமர்ந்துகொண்டார். அதை கிரேன் மூலம் ஆற்றுக்குள் போட்டனர். முன்பாக, “இதனை நான் சரியாக செய்தால் அது மேஜிக். இல்லையென்றால் அது எனக்கு சோகமான முடிவு” என்று கூறினார் லஹிரி. 

அவர் ஆற்றில் குதித்து மீண்டும் வரும் நிகழ்ச்சியை காண, ஹவுரா பாலத்தில் பொதுமக்கள் பலரும் திரண்டுள்ளனர். உள்ளே குதித்த அவர்  வெளியே வரவே இல்லை. அதனால்,  போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு வந்து அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

“அவரை தடுக்க நாங்கள் எவ்வளவோ முயற்சித்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை. பின்னர், எங்கள் நீச்சல் அதிகாரிகள் அவர் குதித்த இடத்தை தேடத் தொடங்கினர். ஆனால், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை நேரம் என்பதால் ஆற்றின் உள்ளே ஒரே இருட்டாக இருந்ததால் தேடுவதை நிறுத்திவிட்டோம்” என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 

நீண்ட நேரம் வராததால் லஹிரி இறந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதனால், அவரது சடலத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ’’ராம்கிருணாஷாபூர் பகுதியில் ஆற்றுக்குள் ஒரு சடலத்தை நேற்று மாலை கைப்பற்றியுள்ளோம். அது லஹிரியின் உடல் போலவே இருக்கிறது. அதை அடையாளம் காணும் பணி நடக்கிறது’’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்பு 2013ம் ஆண்டும் இதேபோல், ஆற்றுக்குள் குதித்து சாகசம் செய்துள்ளார். அப்போது, அவர் தங்களை ஏமாற்றுவதாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து உதைத்துள்ளனர். 6 வருடங்களுக்குப் பின் மீண்டும் அதே சாகசத்தை நிகழ்த்துவதாக ஆற்றில் குதித்தவர் இன்னும் வெளியே வரவில்லை.