இந்தியா

‘எனது வேலையை சமரசமின்றி செய்கிறேன்’: பணிமாற்றத்திற்கு பின் ஐபிஎஸ் டி.ரூபா ட்வீட்

Veeramani

"எனது பணிகாலத்தின் ஆண்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமாக நான் பணிமாற்றம் செய்யப்பட்டேன்" என்று ஐபிஎஸ் அதிகாரி  டி.ரூபா ட்வீட் செய்துள்ளார்.

கர்நாடகாவின் முதல் பெண் உள்துறை செயலாளரான ஐ.பி.எஸ் அதிகாரி டி.ரூபா, வியாழக்கிழமை கர்நாடக மாநில கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். வெள்ளிக்கிழமை, அவர் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கர்நாடகாவின் மற்றொரு ஐ.பி.எஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பால்கருடன் ஏற்பட்ட பகிரங்கமான மோதலுக்கு மத்தியில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிம்பல்கர் உள் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு பெங்களூரில் கூடுதல் ஆணையராக (நிர்வாகமாக) இருந்தார். நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.619 கோடி பெங்களூரு பாதுகாப்பான நகர திட்டத்தின் டெண்டர் பணியில் நிம்பால்கர் முறைகேடு செய்ததாக டி ரூபா குற்றம் சாட்டியதை அடுத்து இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. மறுபுறம், டி ரூபா அதிகார வரம்பில்லாமல் டெண்டர் பணியில் தலையிடுவதாக நிம்பக்லர் குற்றம் சாட்டினார்.

இடமாற்றத்திற்குப் பிறகு, டி ரூபா ட்விட்டரில் "என்னுடைய பணிக்காலத்தின் ஆண்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமாக நான் பணிமாற்றம் செய்யப்பட்டேன். தவறுகளை வெளிக்கொணருதல் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக இந்த நடவடிக்கைகள் இருக்கலாம், அது எனக்குத் தெரியும். ஆனால் நான் தொடர்ந்து எனது வேலையை சமரசமின்றி செய்கிறேன், ”என்று  ட்வீட் செய்துள்ளார்.

இன்னொரு ட்வீட்டில் "முக்கியமானது என்னவென்றால், பொது நலன் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மேலும் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். எனது பணிமாற்றம் மூலம் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வழி வகுத்தால், நான் அதை வரவேற்கிறேன், ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.