மக்களவையில் துணை சபாநாயகர் பதவி கேட்பது எங்களின் உரிமை என்று சிவசேனா கட்சியின் எம்பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
17வது மக்களவையின் முதல் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எம்பிக்கள் அனைவரும் பதவியேற்று கொண்டவுடன் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறும். ஏற்கெனவே பாஜக சார்பில் சபாநாயகர் பதவிக்கு சில பெயர்கள் பரிசிலனையிலுள்ள நிலையில் தங்களுக்கு துணை சபாநாயகர் பதவி தரவேண்டும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், “துணை சபாநாயகர் பதவி எங்களின் கோரிக்கையில்லை. அது எங்களின் உரிமை. இந்தப் பதவி எங்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மக்களவையில் சிவசேனா கட்சி 18 எம்பிக்களை கொண்டுள்ளது. அத்துடன் சிவசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணியிலுள்ளது. அதேபோல மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சியிலுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சிவசேனா கட்சி பாஜக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. எனினும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது.