இந்தியா

“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்

“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்

webteam

பெயர் மாற்றத்திற்கான அபிடவிட் பெற்றுக் கொண்டு, பழைய மதிப்பெண் சான்றிதழ்களிலேயே திருத்தம் செய்து கொடுக்க சிபிஎஸ்இ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், மதிப்பெண் சான்றிதழில் தனது தந்தையின் பெயர் தவறாக இருந்ததால் அதனை திருத்தம் செய்து தருமாறு சி.பி.எஸ்.இ இடம் முறையீடு செய்துள்ளார். இதனை ஏற்க மறுத்த சி.பி.எஸ்.இ, திருத்தம் செய்ய முடியாது எனத் தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாரயணா, மதிப்பெண் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்து வழங்க சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே நீதிபதி புஷ்பா சத்யநாரயணா அளித்த தீர்ப்பை உறுதி செய்த இந்த அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக அவர்கள், “ஒரு மாணவர் தனது மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய உரிய ஆதாரங்களுடன் அபிடவிட் உள்ளிட்டவற்றை அளித்தால் அதை எளிதாக திருத்தி தரலாம். ஆகவே ஏற்கெனவே நீதிபதி அளித்த தீர்ப்பில் எந்தவித பிழையும் இல்லை” எனத் தெரிவித்தனர். 

அத்துடன் புதிய மதிப்பெண் சான்றிதழ் தருவதற்கு பதிலாக பழைய சான்றிதழிலேயே திருத்தம் செய்து தந்தால் போலி மதிப்பெண் சான்றிதழ்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். எனவே சி.பி.எஸ்.இ, மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் பெயரில் திருத்தம் இருந்தால் உரிய அபிடவிட் பெற்று பழைய மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்துத் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.