2017ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ஆதார் என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது
இந்தியாவில் ஆதார் என்ற வார்த்தையை கேள்விப்படாத மக்களே இல்லை என்ற சொல்லலாம். அந்தளவிற்கு ஆதார் என்ற வார்த்தை மக்களிடையே பிரபலமாகிவிட்டது. காரணம் மத்திய அரசின் நலத்திட்ட பயன்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து, வங்கி கணக்கு, பான் எண், ரேஷன் கார்டு உள்பட பல்வேறு அரசு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசும் வலியுறுத்தியது. ஆதார் தொடர்பான பல வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலும் உள்ளன.
இந்நிலையில் 2017ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ‘ஆதார்’ என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது. ‘நோட்பந்தி’, ‘மித்ரன்’ உள்ளிட்ட வார்த்தைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பிரபலமானது என்பதால் ஆதார் வார்த்தை சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.