இந்தியா

“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்

webteam

பிரதமராக இருந்த காலத்தில் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திற்கு பின்னர் தான் ஊடகங்களைச் சந்தித்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள மன்மோகன் சிங், “நான் அமைதியான பிரதமர் என மக்கள் சொல்கின்றனர். நான் எழுதிய ‘சேஞ்சிங் இந்தியா’ புத்தகம் அவர்களுக்காக பேசும் என நான் நினைக்கிறேன். நான் பிரதமராக இருந்த போது ஊடகங்களை பார்த்து பயப்படவில்லை. ஒவ்வொரு முறை வெளிநாட்டு சென்றுவிட்டு திரும்பும்போதும், செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றேன். 

நாங்கள் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியாக விவசாயக் கடன் தள்ளுபடியை நேர்மையாக செய்கிறோம். அதனால் தான் எங்கள் முதலமைச்சர்கள் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கி வலிமையுடனும், சுதந்திரமாகவும் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதுபோன்று செயல்பட ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் வழிகளை கண்டறியும் என நான் வேண்டும் என நம்பிக்கையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். நான் பிரதமராகியது விபத்து என்கிறார்கள். நான் அதேபோன்ற விபத்தால் தான் மத்திய நிதியமைச்சராகவும் மாறினேன்” என்று கூறினார்.

முன்னதாக, தெலங்கானா, மிசோரம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் 5 மாநில தேர்தல்களில், பாஜக ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில் மத்தியப் பிரதேச விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அம்மாநில புதிய முதலமைச்சர் கமல்நாத் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானிலும் அறிவிப்புகள் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. அதேபோன்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையேயான கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில், அவ்வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து சக்திகாந்த தாஸ் புதிய ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.