ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உணவுகளில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படக் கூடாது என்று மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாடு அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் மிஷன் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர்கள்,
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பதின்பருவச் சிறுமிகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக சமையல் பொருள்களும் சமைக்கப்பட்ட உணவுகளும் வழங்கப்படுகின்றன.
இவற்றில் சர்க்கரை, உப்பு உள்ளிட்டவை அதிகளவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதையடுத்து இவற்றைக் குறைக்க அறிவுறுத்தி மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் உணவுப் பொருள்களில் இனிப்பு சேர்க்க வேண்டும் என்றால் வெல்லத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதுவும் அந்த உணவின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து சத்து அளவில் 5 விழுக்காட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் காலை, மதிய உணவுடன் வழங்கப்படும் இனிப்புப் பண்டங்களைக் குறைக்க வேண்டும் என்றும் அதிக சர்க்கரை,
உப்பு, கொழுப்புச்சத்து கொண்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.