ஹெல்த்

ஜிகா, டெங்கு போன்ற பூச்சிகளின் வைரஸால் அடுத்த தொற்றுநோய் - WHO அதிர்ச்சி தகவல்

Veeramani

ஜிகா, டெங்கு உள்ளிட்ட பூச்சிகளால் பரவும் நோய்க்கிருமிகளால் அடுத்த தொற்றுநோய் தூண்டப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பூச்சிகள் மூலம் பரவும் ஆர்போவைரஸ்கள் காரணமாக  வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வாழும் சுமார் 3.9 பில்லியன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



ஏடிஸ் கொசுக்கள் உள்ளிட்ட இந்த ஆர்போவைரஸ்களால் பரவும் நோய்கள் தற்போது உலகளவில் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக காரணிகளின் ஒருங்கிணைப்பால் இந்த நோய்ப்பரவல் தூண்டப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி, டெங்கு காய்ச்சல் 130 நாடுகளில் ஆண்டுதோறும் 390 மில்லியன் மக்களைப் பாதிக்கிறது. ஜிகா வைரஸ் 2016 இல் பரவியது, இது மைக்ரோஎன்செபாலி போன்ற பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டது, ஜிகா வைரஸ் 89 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மஞ்சள் காய்ச்சல், மஞ்சள் காமாலை, கடுமையான ரத்தக்கசிவு காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற மரணத்தை ஏற்படுத்தும் நோய்களும் பல நாடுகளில் பரவுகிறது. சிக்குன்குனியா 115 நாடுகளில் பரவுகிறது.



"இந்த நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள் தீவிரமடைந்து வருகிறது. கோவிட் தொற்று கடந்த இரு ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அடுத்த தொற்றுநோய், ஒரு புதிய ஆர்போவைரஸ் காரணமாக இருக்கலாம். மேலும் ஆபத்து அதிகரித்து வருவதற்கான சில சமிக்ஞைகள் எங்களிடம் உள்ளன" என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.