Fatty liver disease
Fatty liver disease  Pixabay
ஹெல்த்

உலக கல்லீரல் தினம் 2023: முகத்தில் தெரியும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்!

Snehatara

உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 19ஆம் தேதி உலக கல்லீரல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. முக்கிய செரிமான உறுப்பான கல்லீரலில் பித்த நீர் சுரக்கிறது. கொழுப்பு மற்றும் பித்த அமிலங்களை கொண்ட இந்த ஆல்கலைன் திரவமானது கொழுப்புகளை உடைக்க உதவுகிறது. உடலிலேயே இரண்டாம் மிகப்பெரிய உள்ளுறுப்பான கல்லீரலானது ரத்தத்திலிருந்து நச்சுக்களை வெளியேற்றுதல், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல் மற்றும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருத்தல் போன்றவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

இதுபோன்ற ஹெல்த் டிப்ஸ் பெற, புதிய தலைமுறை செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள்..!

அதீத கொழுப்பு கல்லீரலில் சேர்வதே கல்லீரல் கொழுப்பு நோய் (கல்லீரல் வீக்கம்) என்று சொல்லக்கூடிய Fatty liver. இது பரவலாக காணப்படக்கூடிய கல்லீரல் பிரச்னைகளில் ஒன்று. பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரச்னையால் அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. அதேசமயம் மோசமான விளைவுகளையும் இந்த பிரச்னை ஏற்படுத்துவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். இருப்பினும், சிலருக்கு இந்த பிரச்னையால் கல்லீரல் செயலிழக்கும் நிலைகூட ஏற்படலாம். மேலும் கல்லீரல் கொழுப்பு நோயின் அறிகுறிகள் முகத்தில் தென்படும் எனவும், உடனடியாக அதனை கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

தவிர்க்கக்கூடாத சில கல்லீரல் வீக்கத்தின் அறிகுறிகள்

முக வீக்கம்

கல்லீரலில் கொழுப்பு சேரும்போது அது தனது புரதத்தை உருவாக்கும் தன்மையை இழக்கிறது. இது சீரான ரத்த ஓட்டம் மற்றும் திரவத்தை வெளியேற்றுதல் போன்றவற்றை தடுப்பதால் முகத்தில் சற்று வீக்கம் ஏற்படும்.

Neck darkness

கழுத்து சருமம் கருத்தல்

கல்லீரல் கொழுப்பு நோயானது இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதால், சுரக்கும் அதிக இன்சுலினானது ஒன்று திரண்டு, அகந்தோசிஸ் நிக்ரிகன்கஸ் என்ற நிலைக்கு வழிவகுக்கிறது. இது கழுத்தில் மடிப்பு மற்றும் கருமை போன்ற சரும மடிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

ரோஸாசியா

சருமம் சிவத்தல், சிறிய ரத்தநாளங்கள் அல்லது வெள்ளை கொப்புளங்கள் போன்றவை முகத்தில் ஏற்படும் நிலையே ரோஸாசியா. இருப்பினும், ரோஸாசியா பிரச்னை உள்ளவர்கள் அனைவருக்குமே கல்லீரல் கொழுப்பு நோய் இருக்கும் என்று கூறமுடியாது. கல்லீரல் கொழுப்பு நோயின் அறிகுறிகளில் ஒன்று ரோஸாசியா.

வாயைச் சுற்றி சிரங்கு

கல்லீரல் கொழுப்பு நோய் போன்ற நாள்பட்ட கல்லீரல் பிரச்னைகளானது ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இது ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. ஜிங்க் குறைபாட்டால் பொதுவாக ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று டெர்மாடிட்டிஸ். இது வாயை சுற்றி சிரங்கு மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கிறது.

Itching around mouth

அரிப்பு

கல்லீரல் கொழுப்பு நோயானது சரும அரிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உடலில் பித்த உப்புகள் அதிகம் சேருவதால் முக அரிப்பு ஏற்படுகிறது. அரிக்கிறதே என்று சொறிவதால், அரிப்பு மேலும் அதிகமாகுமே தவிர குறையாது என்கின்றனர் நிபுணர்கள்.

மஞ்சள் காமாலை

மேம்பட்ட கல்லீரல் நோயானது மஞ்சள் காமாலைக்கு வழிவகுக்கிறது. சருமம் மற்றும் கண்கள் மஞ்சளாக அல்லது வெள்ளையாக மாறுதல் இதன் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் முதலில் முகம் மற்றும் கண்களில் தெரிந்தபிறகே உடலின் பிற பகுதிகளுக்கு பரவுகிறது. கல்லீரல் சரியாக வேலை செய்யாததால், மஞ்சள்-ஆரஞ்சு நிறமியான பிலிருபின் சுரப்பு அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

கல்லீரலை பாதுகாப்பது எப்படி?

கல்லீரல் பிரச்னைகள் பெரும்பாலானோருக்கு பெரிய பிரச்னையாக உருவெடுக்காவிட்டாலும், சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுக்காவிட்டல் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ஊட்டச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்வதுடன், ஆல்கஹால் மற்றும் போதைப்பொருட்களை தவிர்ப்பது கல்லீரலை சேதமடையாமல் பாதுகாக்கும்.

கல்லீரல் கொழுப்புநோய் உள்ளவர்கள் முறையாக உடற்பயிற்சி மேற்கொள்வது மிகமிக அவசியம்.

மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.