World AIDS DAY
World AIDS DAY freepik
ஹெல்த்

World AIDS DAY | எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏன் அவசியம்?

ஜெனிட்டா ரோஸ்லின்

1987-ஆம் ஆண்டு தாமஸ் நெட்டர் மற்றும் ஜேம்ஸ் பான் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக, உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

எச்ஐவி நோயை பொறுத்தவரை உடலுறவால் மட்டும்தான் இது பரவும் என்ற கருத்து பலரிடமும் இருக்கிறது. உடலுறவால்தான் அதிகம் பரவுகிறது என்றபோதிலும், அதுமட்டுமே காரணம் இல்லை. எய்ட்ஸ் நோயாளிக்கு பயன்படுத்திய ஊசியை, அப்படியே நோயற்றாவருக்கு பயன்படுத்துவது; எய்ட்ஸ் நோயாளிக்கு பயன்படுத்திய ரேசார் ப்ளேடை நோயற்றாவருக்கு பயன்படுத்துவது என எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் ஏதேனுமொரு வகையில் நோயற்றாவருக்கு செலுத்தப்பட்டாலும் பரவும்.

அதேநேரம், ‘எய்ட்ஸ் நோயாளியை தொட்டாலே எய்ட்ஸ் பரவி விடும் , அருகில் இருந்தால் பரவி விடும்’ என்பதெல்லாம் பொய், வதந்தி மட்டுமே. எய்ட்ஸ் குறித்து சரியான விழிப்புணர்வு பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை. 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார நிறுவனம்:

ஜூலை 13, 2023 வெளியிட்ட அறிக்கையின் படி, “எச்ஐவி நோய்தொற்றானது உலகளாவிய பொது சுகாதார பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இதுவரை 40.4 மில்லியன் (அதாவது 32.9–51.3 மில்லியன்) உயிர்களை இந்நோயானது கொன்றுள்ளது. அனைத்து நாடுகளிலும் பரவும் நோயாக இது மாறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள்:

2022 ஆம் ஆண்டின் இறுதியில் 39.0 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3ல் 1 பங்கு அதாவது 25.6 மில்லியன் மக்கள் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ளனர்.

உயிரிழந்தவர்கள்

2022ல் 6,30,000 பேர் இதனால் உயிரழந்துள்ளனர். WHO, குளோபல் ஃபண்ட் மற்றும் UNAIDS போன்ற அமைப்புகள், உலகளாவிய அளவில் எச்.ஐ.வி-யை ஒழிக்க பல யுக்திகளைக் கொண்டுள்ளன. மேலும் அவை 2030 க்குள் எச்.ஐ.வி தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரவும் இலக்கு நிர்ணயித்துள்ளன”

எய்ட்ஸ் - பரவும் விதங்கள்:

பாதுகாப்பாற்ற உடலுறவு, பாதிப்புக்கு உள்ளானவரிடமிருந்து ரத்தம் பெறுவது, குழந்தையெனில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து தாய்ப்பால் பெறுவது, சுகாதாரம் இல்லாத சிரிஞ்சிகள் அல்லது ஊசிகளை பயன்படுத்துவது போன்ற விதங்களில் எய்ட்ஸ் பரவுகிறது.

ஆனால் கை குலுக்குதல், தனிப்பட்ட பொருள்கள் / உணவு / தண்ணீரை பகிர்ந்து கொள்வது போன்ற சாதாரண தினசரி நிகழ்வுகளின் முலம் இந்நோயானது பரவுவதில்லை.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை இழந்து அனைத்து வகையான நோய்களும் எளிதில் தாக்கும்வண்ணம் வலிமை இழந்து காணப்படுகின்றனர்.

அறிகுறிகள்:

ஒரு நபர் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை பாதிக்கப்பட்டு 2 அல்லது 3 மாதங்களுக்கு பிறகே அறிந்து கொள்ள முடியும். தொண்டைப் புண், தோல் வெடிப்பு, குமட்டல், உடல் வலி, தலைவலி, வயிறு தொடர்பான தொற்று பிரச்னைகள், மூட்டு வலி, சருமத்தில் சொறி, வாய்ப் புண், வயிற்றுப்போக்கு, அதீத எடை இழப்பு, தீவிர இருமல், இரவு நேரத்தில் அதிகம் வியர்த்தல் போன்றவற்றில் பல, அறிகுறிகளாக ஒன்றாக இருக்கலாம்.

சிகிச்சை முறை:

தற்போதுவரை இதிலிருந்து முழுமையாக மீள்வதற்கு உதவும் மருந்துகள், சிகிச்சைகள் கண்டுபிடிக்கவில்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் பாதிப்புகளுக்கு ஏற்ப, அவற்றை கட்டுப்படுத்த உதவும் வகையிலான சிகிச்சைகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

எய்ட்ஸிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே, அனைத்துக்கும் முதன்மை.

எச்.ஐ.வி வைரஸ், ரத்தத்தில் உள்ள சிடி 4 என்ற வெள்ளையணுக்களை அழித்து விடுகிறது. சிடி 4 ஐ பொறுத்தவரை 500 முதல் 1000-க்கு மேல் இருக்கவேண்டும். ஆனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அது 200 க்கும் குறைவாக இருக்கும்.

ஆன்டிரெட்ரோவைரல்:

இந்த சிடி 4-ஐ அதிகரிக்க ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை (ART) என்னும் சிகிச்சை முறையானது பின்பற்றப்படுகிறது. இச்சிகிச்சை முறையானது பாதிக்கப்பட்டவர்களின் தொற்றை குணப்படுத்தாது; மாறாக அவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்த உதவும். நோய் கிருமிகள் பன்மடங்கு பரவுவதை தடுக்கும். தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவி செய்து, சம்பந்தப்பட்ட நோயாளியின் வாழ்நாளை நீட்டிக்க உதவுகிறது.

எய்ட்ஸ் நோயினை பொறுத்தவரை, இது வந்துவிட்டால் ‘எளிதாக நோய் எதிரிப்புத் திறன் குறைகிறது, இதனால் பல்வேறு வகையான நோய்களின் இருப்பிடமாக இருக்கிறது, குணப்படுத்த சிகிச்சை முறை எதுவும் இல்லை’ என்று பல எதிர்மறையான விஷயங்கள் இருந்தாலும் ஒரு சில நேர்மறையான நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன என்பது சிறிது ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி. உதாரணமாக,

அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அதிலிருந்து மீட்கப்பட்ட முதல் பெண்ணாக கருதப்படுகிறார்.

மேலும் உலகில் முதன்முறையாக அமெரிக்க மருத்துவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் இருந்து சிறுநீரகத்தை தானமாக பெற்று இன்னொருவருக்குப் பொருத்தியுள்ளனர். தற்போது அந்த இருவருமே நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

WorldAidsDay | WorldAIDSDay2023 | AIDSawareness | AIDS

எச்.ஐ.வி-யை பொறுத்தவரை சரியான விழிப்புணர்வு என்பது இன்றளவும் பலரிடமும் இல்லை என்பதுதான் உண்மை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாக கையாளப்படுவது உண்டு. அவையாவும் அவர்களின் மனநிலையையும் உடல்நிலையையும் மேலும் பாதிக்கும்.

எய்ட்ஸ் நோயினை குணப்படுத்த மருத்துவ சிகிச்சை முறைகள் யாது ? என்று ஒருபுறம் ஆராய்ச்சி சென்று கொண்டு இருந்தாலும்.... சமுதாயத்தில் நாம் அவர்கள் மேல் காட்டும் அரவணைப்பும், அங்கீகாரமும்தான் அவர்களை நோய்க்கு எதிராக தைரியத்துடன் போராட உதவும். அதை செய்வோமாக!