உறக்கம்  Pt web
ஹெல்த்

தூக்கம் ஏன் அவசியம்? எச்சரிக்கும் நிபுணர்கள்! பலன்கள் என்னென்ன?

நாம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ஆழ்ந்து உறங்கும்போது மட்டுமே நமது உடலில் உள்ள 'ஸ்டெம்செல்கள்' வீரியமடைந்து, சிதைந்த திசுக்களைச் சீரமைக்கும் பணியைத் தொடங்குகின்றன.

Prakash J

வெறும் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்குவது, உங்களை 48 மணி நேரம் தூங்காமல் இருந்தவரைப் போன்ற உடல் சோர்வுக்கு உள்ளாக்கும். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு ஏழு மணி நேரத் தூக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே நீண்டகால நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க முடியும்.

நமது உடலுக்குள் ஒரு மிகப்பெரிய பழுதுபார்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல, அது ஒரு முக்கியமான உயிரியல் செயல்முறை என்பதை விளக்குகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு. ஆம், பரபரப்பான இந்த நவீன உலகில் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதுகூட ஏதோ பெரிய குற்றத்தை செய்தது போன்ற உணர்வை பலரிடமும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக மாணவர்கள், பணிபுரியும் பெண்கள் தூங்கி எழுந்தவுடன் அன்றைய வேலைகளை நினைத்து ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். தூக்கம் ஆடம்பரம் அல்ல, அது உயிர்வாழ அடிப்படைத் தேவை என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

நாம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ஆழ்ந்து உறங்கும்போது மட்டுமே நமது உடலில் உள்ள 'ஸ்டெம்செல்கள்' வீரியமடைந்து, சிதைந்த திசுக்களைச் சீரமைக்கும் பணியைத் தொடங்குகின்றன. முறையான தூக்கம் இல்லையெனில், இந்தச் சீரமைப்புப் பணி பாதியிலேயே நின்றுவிடும் என்றும், அது உடலில் நச்சுக்கள் சேர வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வெறும் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்குவது, உங்களை 48 மணி நேரம் தூங்காமல் இருந்தவரைப் போன்ற உடல் சோர்வுக்கு உள்ளாக்கும். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு ஏழு மணி நேரத் தூக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே நீண்டகால நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதை வெற்றியின் அடையாளமாகவும், ஓய்வு எடுப்பதை சோம்பேறித்தனமாகவும் கருதுவது தவறான பார்வை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறைவான தூக்கம்

மேலும், “ஓய்வு எடுப்பது அடுத்த நாள் சிறப்பாக செயல்பட மூளைக்கு தரும் முதலீடு என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும். படுக்கைக்கு செல்லும் முன் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடும்போது மனபாரம் குறையும். மற்றவர்களின் சுறுசுறுப்புடன் உங்கள் உடலை ஒப்பிடாமல் தேவையான ஓய்வை அளிக்க வேண்டும். மூச்சுவிடுவதற்கு எப்படி குற்ற உணர்ச்சி தேவையில்லையோ அதேபோல தூங்குவதற்கும் தேவையில்லை” என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, தூக்கம் என்பது ஒரு சோம்பேறித்தனம் அல்ல, அது உங்கள் உடலை மீண்டும் புதுப்பிக்கும் ஓர் ‘அதிசய டயட்' என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.