ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் முகநூல்
ஹெல்த்

ரத்த அழுத்தம் பிரச்னை இருக்கா? அப்போ இதை கண்டிப்பா படிங்க!

ஜெனிட்டா ரோஸ்லின்

சமீபத்திய ஒரு புள்ளிவிவரத்தில், இளம் வயதில் 100ல் 10 பேருக்குக் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளது என்றும் வயது கூடும்போது பாதிக்கப்படுவோர் சதவீதம் கூடுகிறது என்றும் தெரியவந்துள்ளது. இந்தளவுக்கு அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவதன் பின்னணி என்ன்? ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகின்றது? அதற்கான காரணிகள் என்ன? இவற்றை நமக்கு விரிவாக சொல்கிறார் பொது நல மருத்துவர் அருணாச்சலம்.

பொது நல மருத்துவர் அருணாச்சலம்

“ரத்த அழுத்தத்தில் நாம் காட்டும் அலட்சியம் மிகப்பெரிய வாழ்நாள் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். ஒருமுறை என்னை காணவந்த 45 வயது நிரம்பிய ஒருவருக்கு பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு உரிய மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்தேன். மேலும் நான் கூறும் வரை அவற்றை நிறுத்த கூடாது என்றும் அறிவுறுத்தினேன். ஆனால் அவர் பின்பற்றவில்லை. இதனால் ரத்த அழுத்தத்தில் ஆரம்பித்த அவரின் பிரச்னைகள், அவரின் உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்தி அவருக்கு பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு ஆபத்தில் கொண்டு போய் சேர்த்தது. இது எப்படி சாத்தியம்? சொல்கிறேன்.

ரத்த அழுத்தம் என்பது என்ன?

ரத்தக்குழாய்களில் ஓடும் ரத்தமானது அதன் உள்சுவரின் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தினையே ரத்த அழுத்தம் என்று கூறுகிறோம்.

ரத்த அழுத்தம் என்பது என்ன?

ரத்த அழுத்தமானது இயல்பு நிலையை மீறி செயல்படும்போது, உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும். அல்லது அது செல்லும் விகிதம் குறையலாம். இது நாள்படும்போது ரத்த அழுத்த குறைபாடாக மாறும்.

இதனால்தான் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எல்லா பகுதிகளுக்கும் ரத்தமானது சரியான அழுத்ததில் சென்று சேர வேண்டும் என சொல்கிறோம். ஒருவேளை ஏதேனும் பகுதிக்கு ரத்தம் சரியாக செல்லவில்லையென்றால், அப்பகுதியில் உள்ள உடல் உறுப்பு அழுகி அழிந்துவிடும் நிலைகூட ஏற்படக்கூடும்.

ரத்த அழுத்தத்தின் வகைகள்:

சிஸ்டாலிக்,

டயஸ்டாலிக்

- இதயமானது ரத்தத்தை உள்ளிழுக்கும் அழுத்தத்திற்கு சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் எனப்பெயர்

- இதயமானது ரத்தத்தை வெளித்தள்ளும் அழுத்தத்திற்கு டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் எனப்பெயர்

சிஸ்டாலிக் - டயஸ்டாலிக்

ரத்த அழுத்தத்தில் இயல்புநிலை என்பது 120/80. இதில் 120 என்பது சிஸ்டாலிக், 80 என்பது டயஸ்டாலிக். இந்த இயல்புநிலை, வயதைப் பொறுத்து மாறுதலுக்கு உள்ளாகிறது. எடுத்துக்காட்டுக்கு 10 முதல் 19 வயதுக்கு உள்பட்ட இளம் வயதினருக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 120 முதல் 136 வரையிலும், டயஸ்டாலிக் அழுத்தம் 82 முதல் 86 வரையிலும் இருப்பது இயல்புநிலையாக கருதப்படும்.

ரத்த அழுத்தத்தால் ஏற்படகூடிய ஆபத்துகள் என்ன?

முறையான மருத்துவ பரிந்துரையுடன் ரத்த அழுத்தத்தை கவனிக்காவிட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு

- டிமென்ஷியா என்படும் மறதி நோய்

- மாரடைப்பு அல்லது பக்கவாதம்

- இதயம் செயலிழப்பது

- ரத்தத் தமனி விரிவடைதல்

- சிறுநீரகக் கோளாறுகள்

- பார்வைக் கோளாறுகள்

- மெட்டபோலிக் சிண்ட்ரோம்

- சிந்தனையில் தடுமாற்றம்

போன்றவை ஏற்படலாம். ஆகவே ரத்த அழுத்தம்தானே என அலட்சியமாக இருக்கவேண்டாம். உரிய மருத்துவ வழிமுறைகளை பின்பற்றவும்”