நீரிழிவு நோய் vitapix
ஹெல்த்

நீரிழிவு நோய்| பெண்களுக்கு மனநலம், ஆண்களுக்கு இதய நோய்.. பக்கவிளைவு எச்சரிக்கை!

நீரிழிவு நோயால் பெண்கள் மற்றும் ஆண்கள் இருதரப்பும் இருவேறு பாதிப்புகளை எதிர்கொள்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Rishan Vengai

இங்கிலாந்து குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வில், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனநலப் பிரச்சினைகள் 8.1% அளவில் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் பெண்களில் மன அழுத்தம் வேகமாக வெளிப்படுவதால், நீரிழிவு சிகிச்சையுடன் மனநல பரிசோதனைகளையும் வழக்கமாகச் செய்ய வேண்டும் என ஆய்வு வலியுறுத்துகிறது; பாலினம், வயதுக்கு ஏற்ற தனிப்பட்ட சிகிச்சை அவசியம் எனவும் கூறுகிறது.

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பக்கவிளைவுகள் வேறுபடுவதாக இங்கிலாந்தின் குயின் மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 28,000க்கும் மேற்பட்டோரின் மருத்துவக் குறிப்புகளை ஆய்வு செய்ததில், நீரிழிவு நோய்க்குப் பிறகு பெண்களுக்கு மனநலப் பாதிப்புகள் அதிகமாக, அதாவது 8 புள்ளி ஒரு சதவீதம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு மன அழுத்தப் பாதிப்புகள் விரைவாக வெளிப்படுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு வழக்கமான மனநல பரிசோதனைகள் அவசியம் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நீரிழிவு நோய்

அதேவேளையில், ஆண்களுக்கு இதய நோய்கள் 8 புள்ளி 4 சதவீதம் ஏற்பட வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் பெண்களுக்கு முன்பாகவே ஆண்களுக்கு ஏற்படுகின்றன. நீரிழிவு நோயுடன் மனநலப் பாதிப்பும் சேரும்போது, ஆண்-பெண் இருபாலருக்கும் குறைந்த வயதிலேயே உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, பாலினம் மற்றும் வயதுக்கு ஏற்ப தனித்துவமான சிகிச்சை முறைகளை வழங்க வேண்டியது அவசியம் என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.