ஹெல்த்

மெதுவாக நடக்கும் பழக்கமுடையவரா? - உங்கள் நடைப்பழக்கமே உடல்நல கேட்டிற்கு கேரன்டி!

மெதுவாக நடக்கும் பழக்கமுடையவரா? - உங்கள் நடைப்பழக்கமே உடல்நல கேட்டிற்கு கேரன்டி!

Sinekadhara

நாம் அனைவருமே ஒவ்வொரு மாதிரியாக அடிவைத்து நடக்கும் பழக்கமுடையவர்கள். சிலர் வேகமாக நடப்போம், சிலர் மெதுவாக நடப்போம். நடையில் என்ன இருக்கிறது என்றுதானே தோன்றும். ஆனால் நாம் எவ்வாறு அடிவைத்து நடக்கிறோம் என்பதைப் பொருத்துதான் உடல் ஆரோக்கியமும் இருக்கிறது என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக மெதுவாக அடிவைத்து நடப்பவர்களுக்கு பின்னாளில் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

45 வயதுக்கு மேலானவர்களுக்கு இயல்பாகவே உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் என்பது நமக்கு தெரியும். அதிலும் மெதுவாக அடிவைத்து நடப்பவர்களுக்கு அல்சைமர் என்று சொல்லக்கூடிய ஞாபக மறதி நோய் வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்கின்றது ஜாமா நெட்வொர்க் ஜர்னலில் வெளியான ஒரு கட்டுரை.

மேலும் மெதுவாக நடைவைத்து நடப்பவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்திக் குறைவு, நுரையீரல் மற்றும் பற்கள் பாதிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படும். மேலும் இவர்களுக்கு மூளையின் செயல்திறன் குறைதல் மற்றும் சிறு காயங்கள் போன்ற பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் என்று கூறுகிறது அந்த ஆராய்ச்சி கட்டுரை. பாரிஸைச் சேர்ந்த மற்றொரு மருத்துவ ஆராய்ச்சி மெதுவாக நடப்பவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் மூன்று மடங்கு அதிகம் என்கிறது. மேலும் மெதுவாக நடப்பவர்களுக்கு வேகமாக நடப்பவர்களைவிட 2.9 மடங்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளும் வரலாம்.

இந்த ஆராய்ச்சியானது ஒரு தனிநபரின் வயதைவிட உடலின் இயக்கம் மற்றும் நடக்கும் வேகத்தை மட்டுமே கருத்தில்கொண்டு நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற ஆராய்ச்சிகளில் மெதுவாக நடப்பவர்கள் சீக்கிரத்தில் இறந்துவிடக்கூடும் என்ற திடுக்கிடும் தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடல்நலத்தை கருத்தில்கொள்பவர்கள் எப்போதும் மெதுவாகவே நடக்காமல் சற்று வேகமாக நடக்க பழகவேண்டும். இது உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.