Diabetic ICMR study pt
ஹெல்த்

சர்க்கரை நோயாளிகளுக்கு 53% அதிகம் ஆபத்து.. புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

சர்க்கரை நோயாளிகளுக்கு அல்சைமர் நோய் ஆபத்து 53% அதிகம்: புதிய ஆய்வின் அதிர்ச்சி தகவல்

PT WEB

செய்தியாளர் - M.மீரா

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அல்சைமர் (Alzheimer's) எனப்படும் மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 53 சதவீதம் அதிகம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக (Curtin University) ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், டைப் 2 சர்க்கரை நோய்க்கும் அல்சைமர் நோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து 40 ஆய்வுகள் நடத்தப்பட்டன.

Diabetic ICMR study

இந்த ஆய்வுகளில் மொத்தம் 2.71 கோடிக்கும் அதிகமான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் முடிவில், டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அல்சைமர் ஏற்படும் ஆபத்து, சர்க்கரை நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது 53 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், டைப் 2 சர்க்கரை நோய் உள்ள 1,000 பேரை ஓராண்டு கண்காணித்த போது , சராசரியாக 4.7 பேருக்கு அல்சைமர் நோய் புதிதாக ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அல்சைமர் என்பது மூளையின் செயல்பாடுகளைப் பாதிக்கும் ஒரு நோயாகும். இதனால் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் படிப்படியாகக் குறையும்.

diabetes alternative foods

இந்த ஆய்வின் முடிவுகள், சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிப்பதுடன், நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியத்தையும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இந்த ஆய்வு ’Alzheimer's Research and Therapy’ என்ற மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.