ஹெல்த்

குரங்கு அம்மையை கண்டறிய புது பரிசோதனை முறை.. கண்டுபிடித்த இந்திய மருந்து நிறுவனம்!

நிவேதா ஜெகராஜா

உலகெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், அதை கண்டறிவதற்கான பரிசோதனை முறையை இந்தியாவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் கண்டறிந்துள்ளது.

டிரிவிட்ரான் (TRIVITRON) என்ற நிறுவனம் ஆர்டி-பிசிஆர் முறையில் குரங்கம்மையை கண்டறியும் முறையை அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுவதும் 250க்கும் மேற்பட்டோர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை யாருக்கும் பாதிப்பு உறுதியாகவில்லை. எனினும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, சில அறிகுறிகளும் முன்னேற்பாடு நடவடிக்கைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி பின்வருவோர் குறித்த தகவல்களை சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என தேசிய நோய்த்தடுப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி,

* இதுவரை நாம் பார்த்திடாத புதிய வகை தடிப்புகள் உடலில் ஏற்படுவோர்,

* குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட அல்லது குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஏதேனும் ஒரு நாட்டிற்கு கடந்த 21 நாட்களில் பயணம் செய்தவர்கள்,

* குரங்கு அம்மை ஏற்பட்டோர் அல்லது இந்நோய் இருக்கும் அறிகுறி இருப்போருடன் தொடர்பில் இருந்தோர்

இவர்கள், சுகாதாரத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவர்களில் சந்தேகத்திற்கிடமான அனைத்து நோயாளிகளும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.