காற்று மாசுபாடு X
ஹெல்த்

காற்று மாசுபாடு | கருவில் இருக்கும் சிசுவுக்கு ஆபத்து.. டெல்லி எய்ம்ஸின் ஆய்வில் தகவல்!

நச்சுக் காற்று மாசுபாடு கர்ப்பிணிகளுக்கும் கருவில் உள்ள குழந்தைகளுக்கும் நேரடி ஆபத்தை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துகிறது.

PT WEB

நச்சுக் காற்று மாசுபாடு கர்ப்பிணிகளையும், அவர்கள் கருவில் இருக்கும் குழந்தைகளையும் எவ்வாறு நேரடியாகப் பாதிக்கிறது என்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விஞ்ஞானிகள் விரிவாகக் கண்டறிந்துள்ளனர். ஐசிஎம்ஆர் நிதியுதவியுடன், டெல்லி மற்றும் ஜார்க்கண்டின் தியோகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 994 கர்ப்பிணிகளின் பிரசவத் தரவுகள் மற்றும் எலிகள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. காற்றில் உள்ள பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 போன்ற நுண்ணிய நச்சுத் துகள்கள், நஞ்சுக்கொடித் தடையை மீறி உள்ளே நுழைவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு

இது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியப் புரதத்தின் செயல்பாட்டை முடக்குகிறது. இதன் காரணமாக, டெல்லியில் உள்ள கர்ப்பிணிகளுக்குக் குறைந்த எடையில் குழந்தை பிறப்பதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. மேலும், கர்ப்பகால உயர் ரத்த அழுத்த பாதிப்பான 'ப்ரீக்ளாம்ப்ஸியா' ஏற்படுவதற்கும் இது முக்கியக் காரணியாக அமைகிறது. மேலும், இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி, நரம்பியல் குறைபாடுகள் மற்றும் மனப்பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, கர்ப்பிணிகள் மாஸ்க் அணிவது மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.