இதய நோய் பிரச்சினை உள்ளவர்கள் பல் வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் மாரடைப்புக்கான அறிகுறியாக அது இருக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாரடைப்பு உட்பட இதய பாதிப்புகள், மார்பகம், தோள்பட்டை, கழுத்து, முகம், தாடை மற்றும் பல் வலி மூலமாக வெளிப்படுவதுண்டு. இந்த அறிகுறிகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இதய பிரச்சினை உள்ளவர்கள் பல் வலியை அறிகுறியாக கவனிக்கத் தவறுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், பல் வலி வந்தாலே அது இதய பாதிப்பு தொடர்பானது என கருதத் தேவையில்லை. இதய பிரச்சினை இருப்பவர்கள் பல் வலி குறித்து கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.