ஹெல்த்

தேமல் அலட்சியம் வேண்டாம்.. இன்று உலக தொழுநோய் தினம்

JustinDurai

தொழு நோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி உலகத் தொழுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி காலத்தில் தொழு நோயாளிகள் மீது மிகப்பெரிய சமூக ஒதுக்குதல் தன்மை இருந்தது. இருப்பினும் அதையெல்லாம் மீறி அதை உடைக்கும் வண்ணம் தொழு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியான பர்ச்சூர் சாஸ்திரியை தனது ஆசிரமத்தில் தங்கவைத்து, தானே அவருக்கு உணவு மற்றும் சேவைகள் செய்தார். இதன் நினைவாக இந்தியாவில் வருடாவருடம் அவரது நினைவு நாளில் இருந்து அடுத்த இரு வாரங்கள் தொழுநோய் விழிப்புணர்வுக்காக கடைபிடிக்கப்படுகிறது.

தொழுநோய் குறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறும்போது, ‘’தொழுநோய் ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் பரவும் சரும நோயாகும். இந்த நோயை உருவாக்குவது "மைக்கோ பேக்டீரியம் லெப்ரே" எனும் பாக்டீரியா.  

இந்தக் கிருமி உடலுக்குள் நுழைந்து நோய் வரவழைக்க எடுத்துக்கொள்ளும் காலம் (Incubation Period) சராசரியாக ஐந்து ஆண்டுகள். இந்தக் காலம் ஒரு ஆண்டு முதல் இருபது ஆண்டுகள் வரை கூட இருக்கலாம். இந்த நோய் தோல், நரம்புகள், மேல் சுவாசப்பாதையின் சளிப்படலம், கண்கள் போன்றவற்றை தாக்கும் தன்மை கொண்டது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி, உணர்ச்சியற்ற தேமல். கூடவே கை மற்றும் பாதங்களில் மதமதப்பு, எரிச்சல் போன்ற தன்மை, கை, கால்கள், கண் இமைகள் போன்றவை வலிமை இழத்தல், முகம் மற்றும் காது மடல்கள் வீங்கி காணப்படுதல், காயங்களில் வலி இல்லாமல் இருத்தல் போன்றவை மற்ற அறிகுறிகளாகும்.

தொழுநோயை கூட்டு மருந்து சிகிச்சை (Multi Drug Therapy) மூலமாக முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இந்த நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து அவர் தும்மும் போதும் இருமும் போதும் சளித் துகள்கள் மூலம் மற்றவருக்கு பரவுகிறது. மேலும் இந்த நோய் உள்ளவரிடம் அடிக்கடி நேரடி உடல் சார்ந்த தொடர்பில் இருப்பவர்களுக்கு நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

தொழுநோயை குணப்படுத்தாமல் விட்டால் நோய் தன்மை முற்றி நரம்புகள், தோல் மற்றும் கை, கால் , கண்கள் போன்றவற்றில் நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தும். கிருமிகளின் எண்ணிக்கை மற்றும் அடர்த்தியை பொறுத்து இந்த நோயை குறைவான கிருமிகள் ஆட்கொண்ட தொழுநோய் (Paucibacillary) மற்றும் அதிகமான கிருமிகள் உட்கொண்ட தொழுநோய் (Multi bacillary) என்று பிரிக்கலாம்.

பாசிபேசில்லரி லெப்ரசியில் ஐந்துக்கும் குறைவான உணர்ச்சியற்ற தேமல்கள் இருக்கும். மல்ட்டி பேசில்லரி லெப்ரசியில் ஐந்துக்கும் அதிகமான உணர்ச்சியற்ற தேமல்கள் இருக்கும், கூடவே நரம்பு சுருண்டு, தடிமனாக இருக்கலாம்.

உங்களுக்கோ அல்லது உங்களது நண்பருக்கோ உறவினருக்கோ உணர்ச்சியற்ற தேமல் காணப்பட்டால் உடனே அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியரை சந்தித்து தொழு நோயா என்பதை உறுதி செய்து உடனே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். எத்தனை சீக்கிரம் சிகிச்சை ஆரம்பிக்கிறோமோ? அத்தனை நல்லது. தொழுநோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

உலகத்தில் இருக்கும் தொழுநோய்ச் சுமையில் 57% பேர் இந்தியாவில் இருக்கிறது. இதை நாம் குறைத்து தொழுநோயை இல்லாமல் செய்ய தொழுநோயை சீக்கிரமே கண்டறிந்து சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் தொழுநோய் பரவுவதை தடுக்க முடியும்.

தொழு நோய் குறித்து அறிய வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

* தொழுநோய் முழுவதும் குணப்படுத்தக்கூடிய நோய்.

* அரசு மருத்துவமனைகளில் தொழுநோய்க்கு இலவசமாக சிகிச்சை கிடைக்கிறது.

* தொழுநோய் பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு பரவும் மரபணு நோயல்ல. ஆகவே கர்ப்பிணி தாயிடம் இருந்தோ தந்தையிடம் இருந்தோ குழந்தைக்கு பரவாது.

* தொழுநோய் சாதாரண தொடுதல் மூலமோ, கை குலுக்குவது மூலமோ, கூட விளையாடுவது மூலமோ, ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதாலோ பரவாது. தொடர்ச்சியாக மிக நெருக்கமான உடல் சார்ந்த தொடர்பு இருந்தால் மட்டுமே நோய் பரவும் வாய்ப்பு இருக்கிறது

* தொழுநோய் முந்தைய ஜென்மத்தின் பாவங்களால் வருவது அன்று. ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு கிடைத்த சாபமும் அன்று. இது ஒரு பாக்டீரியாவால் உருவாகும் தொற்று நோய். இதுவே அறிவியல் சார்ந்த உண்மை என்பதை உணர வேண்டும்.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாந்தர்களும் இந்த உலகில் வாழ்வதற்கு அத்தனை தகுதிகளும் பெற்றவர்களே. அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்து அவர்களை அரவணைக்க வேண்டியது நமது கடமையாகும். தொழுநோயை ஒழிப்போம்; தொழு நோய் வந்தவர்களை அரவணைப்போம். இந்ந நாளில் தொழு நோய்க்கு சிறப்புற சிகிச்சை அளித்தும் அரவணைத்தும் காத்திடும் மருத்துவர்கள் மற்றும் தொழு நோய் திட்ட செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்’’ என்கிறார் அவர்.