ஹெல்த்

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் உணவு வகைகள் - என்ன சொல்கிறது ஆய்வு?

Sinekadhara

பெண்களுக்கு வரக்கூடிய பெரும்பான்மையான நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமென்றாலும் பெண்கள்தான் இந்த புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். சீரற்ற வாழ்க்கைமுறை, உடற்பருமன் மற்றும் வளர்சிதைமாற்ற பிரச்னைகளால் மார்பக புற்றுநோய் உருவாகிறது. இருப்பினும், n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது இந்த கொடிய நோயை வெல்ல உதவும் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டியின் இதழான மெனோபாஸில் இதுகுறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா 6 மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையான தொடர்பைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் 1600 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த ஆய்வின் முடிவில், மீன் போன்ற கடல் உணவுகளிலுள்ள ஊட்டச்சத்துகள் புற்றுநோய் பாதிப்பின் ஆபத்துகளை குறைந்த அளவில் கொண்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

மேலும், டயட் மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றங்களை கொண்டுவருவது மூன்றில் ஒருவரை ஆபத்திலிருந்து காப்பதாக கூறுகிறது இந்த ஆய்வு. அதிக நார்ச்சத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன்மூலமும் அதிக பால் பொருட்களை தவிர்ப்பதன்மூலமும் கேன்சர் கட்டிகள் வராமல் தடுக்கமுடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒமேகா 3 கொழுப்புகளானது உடலுக்கு அநேக நன்மைகளை வழங்குவதுடன், வளர்சிதை மாற்ற குறைபாடுகள், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு பிரச்னைகள் வருவதை தடுக்கிறது. மேலும் இதிலுள்ள அழற்சி எதிர்பொருட்கள் உடலை ஆக்சிஜனேற்றத்துடன் வைத்து நோய்களிலிருந்து தள்ளியிருக்க உதவுகிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகள்:

1. ஹெர்ரிங் மீன்
2. சால்மன் மீன்
3. ஆலிவ் எண்ணெய்
4. ஆளி விதைகள்
5. நெத்திலி
6. வால்நட்ஸ்
7. சியா விதைகள்
8. மத்தி மீன்

இந்த மீன் மற்றும் உணவுகள் தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளும்போது அது பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பதுடன் தினசரி உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்கும். எனவே ஆரோக்கியமான டயட் முறையின்மூலம் கேன்சர் மட்டுமல்லாமல் பிற நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.