Menopause
Menopause  Pixabay
ஹெல்த்

மெனோபாஸில் உள்ள பெண்களே! இந்த உணவுகளை தவறாம எடுத்துக்கோங்க!

Snehatara

மெனோபாஸ் என்பது இனப்பெருக்க காலம் முற்றுப்பெறும் நிலை. இந்த காலகட்டத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இந்த சமயத்தில் திடீரென மேற்புற உடல் (முகம், கழுத்து மற்றும் மார்பு பகுதி) சூடாகுதல், இரவில் வியர்த்தல், மனநிலை மாற்றங்கள், பிறப்புறுப்பு வறட்சி, கவலை, எடை அதிகரிப்பு மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்ற அறிகுறிகள் தென்படும்.

மெனோபாஸ் காலத்தை உடல் மற்றும் மனநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படாமல் சூமூகமாக கடக்க உணவுப்பழக்கங்களில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

1. சோயா பொருட்கள்

Menopause women

சோயா பொருட்களான டோஃபு (சோயா பன்னீர்), சோயா விதைகள் மற்றும் சோயா மில்க் போன்றவற்றில் ஈசோஃப்ளாவோனேஸ் நிறைந்திருக்கிறது. இது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் செயல்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஈசோஃப்ளாவோனேஸானது மெனோபாஸ் அறிகுறிகளை தணித்து, இதய நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. சோயா பொருட்களில் தாவர புரதங்கள் நிறைந்திருக்கின்றன. இது பெண்கள் தங்கள் தசை வலிமையை கட்டுக்குள் வைத்திருக்கவும், வயதான தோற்றம் வராமலும் தடுக்கிறது.

இதுபோன்ற ஹெல்த் டிப்ஸ் பெற, புதிய தலைமுறை செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள்..!

2. பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் மெனோபாஸ் காலத்தில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிண்டடுகள் நிறைந்திருக்கின்றன. கீரை, காலே (பரட்டைக்கீரை) மற்றும் ப்ரக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் வைட்டமின் கே நிறைந்திருக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் பெர்ரீஸ், ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி உள்ளது. இது கொல்லாஜன் அளவை ஊக்குவிப்பதுடன் வயதான தோற்றத்தை குறைக்கிறது.

3. ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது. மேலும் இவற்றில் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் இருப்பதால் இதய நோய்கள், நீரிழிவு மற்றும் சில வகை கேன்சருக்கு எதிரான எதிர்ப்புசக்தியை கொடுக்கிறது. இதுமட்டுமல்லாமல் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அறிவாற்றல் மற்றும் ஞாபக சக்தி குறைவதை தடுக்கவும் ஒமேகா 3 உதவுகிறது.

Omega 3 fatty fish

4. முழு தானியங்கள்

பழுப்பரிசி, தினை மற்றும் பார்லி போன்றவற்றில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இவை இதய நோய்கள் வரமால் தடுப்பதுடன், ஹார்மோன் சமச்சீரின்மை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்தும் விடுதலை கொடுக்கிறது. முழு தானியங்களில் அத்தியாவசியமான வைட்டமின்களான வைட்டமின் பி, இ மற்றும் மினரல்களும், மக்னீசியமும் நிறைந்திருக்கிறது. இது ஆற்றலை ஊக்குவிப்பதுடன், எலும்பு வலிமையை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது.

5. நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இவை திருப்தி உணர்வை தருவதுடன், அதிகம் சாப்பிடுவதை குறைக்கிறது. மேலும் இவற்றில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் இருப்பதால், மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் திடீர் மேற்புற உடற்சூடு, இரவில் வியர்த்தல் மற்றும் மனநிலை மாற்றங்களை சரிசெய்கிறது. மேலும் இவற்றில் எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றும் அத்தியாவசிய மினரல்களான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவையும் இருக்கிறது.

Calcium and vitamin D foods

6. கால்சியம் மற்றும் வைட்டமின் டி

மெனோபாஸ் காலகட்டத்தில் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி மிகவும் அவசியம். பால், சீஸ், தயிர் மற்றும் பச்சை கீரைகளான காலே, கீரை மற்றும் பிரக்கோலி போன்றவற்றில் கால்சியம் இருக்கிறது. சருமத்தின்மீது வெயில் படும்போது வைட்டமின் டி உருவாகிறது. இதுதவிர வலுவூட்டப்பட்ட பால் பொருட்கள், கொழுப்பு மீன்களிலும் வைட்டமின் டி இருக்கிறது. மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் முடிந்தவரை மருத்துவர்களின் ஆலோசனையுடன் வைட்டமின் டி மற்றும் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற உணவுகளை தங்கள் தினசரி டயட்டில் சேர்ப்பது ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருப்பதுடன், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆற்றலை ஊக்குவித்து, நாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது. இதுதவிர நிபுணர்களின் ஆலோசனை பெற்று மெனோபாஸ் சமயத்தில் முறையான உணவு மற்றும் வாழ்க்கைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.