மருத்துவர்கள் பரிந்துரையின்றி ஒரு சில மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி போதைக்காக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் வழக்குகள் குறித்த புள்ளி விவரத்தை தமிழக காவல் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டு 10,665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 10256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 ஆயிரத்து 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17903 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022இல் 26 ஆயிரத்து 302 கிலோ கஞ்சாவும், 2023இல் 23 ஆயிரத்து 364 கிலோவும், கடந்த ஆண்டில் 21 ஆயிரத்து 423 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 760 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.