ஹெல்த்

2 நாள்களில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு: ஆய்வுக்கு உத்தரவிட்ட சத்தீஸ்கர் முதல்வர்

நிவேதா ஜெகராஜா

சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அம்மாநில அரசு சார்பில் மூத்த மருத்துவக் குழுவொன்று மருத்துவமனையை ஆய்வு செய்ய நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை செயலர் அலோக் சுக்லா தெரிவிக்கையில், “தொடர் இறப்புகள் குறித்து விசாரிக்க மூத்த மருத்துவர் குழு சென்றுள்ளது. ஏதேனும் தவறோ அசாதாரணமான சூழலோ அங்கு தெரியவந்தால் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்துள்ளார். முன்னதாக இறந்த 4 பச்சிளம் குழந்தைகளில் ஒரு குழந்தையின் தாய், தன் குழந்தையின் இறப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணமென மாநில அரசிடம் முறையிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மாநில அரசு மருத்துவ அதிகாரிகளுடன் அவசர கூட்டமொன்றையும் நடத்தி, பின்னரே மருத்துவர் குழுவை சூழல் ஆய்வு செய்ய அனுப்பி வைத்தது.

மருத்துவமனை தரப்பில் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் மரு.லகான் சிங் ஊடகங்களில் தெரிவிக்கையில், “நான்கு குழந்தைகளும் பிறப்பு சார்ந்த சிக்கலினாலேயே இறந்தார்கள். இவர்கள் நால்வரும் இங்கிருக்கும் வெவ்வேறு மருத்துவமனைகள் சிகிச்சைபெற்று, அந்த மருத்துவமனைகள் தங்களால் காப்பாற்ற முடியவில்லை எனக்கூறி இந்த மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டவர்கள். அம்மருத்துவமனைகளேதான், எங்கள் மருத்துவமனையில் குழந்தையை சேர்க்க பரிந்துரைத்தன. அப்படி இங்கே அனுமதி பெற்று சிகிச்சைபெற்றபின்னரும்கூட, சிகிச்சை பலனின்று போனது துரதிஷ்டவசமானது. நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை அக்.15-ம் தேதியும், பிற 3 குழந்தைகளும் அக்.16-ம் தேதியும் இறந்தனர்.

இறந்த 4 குழந்தைகளில் இருவர் birth asphyxia எனப்படும் பிறப்பின்போது ஏற்படும் மூச்சுத்திணறலினாலும், இன்னும் இருவர் எடை குறைவினாலும் இறந்துள்ளனர். மாநில அரசின் மூத்த மருத்துவர் குழு வரும் முன்னர், எங்கள் மருத்துவக்கல்லூரி சார்பில் 3 பேர் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டு இதுதொடர்பாக விசாரிக்கப்படும்” என தெரிவித்திருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநில அரசு, இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இவ்விவகாரம் அறிந்தவுடன் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் டியோ தனது டெல்லி பயணத்தை பாதிவழியில் ரத்து செய்திருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், முதல்வர் பூபேஷ் பாகலின் அறிவுறுத்தலின்படி இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.